Breaking News :கல்முனை வைத்தியசாலை விடயத்தில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் மத உரிமைகள் மீறப்பட்டுள்ளன

மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஆறு முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2026 ஒக்டோபர் 12ஆம் திகதி இன்று வெளியிடப்பட்ட விசாரணை முடிவுகளின்படி, பணியின்போது தலைக்கவசம் உள்ளிட்ட மத ஆடைகளை அணிய வேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தமை சட்டவிரோதமானது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட இந்தப் பெண் ஊழியர்கள், கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி கடமைக்குச் சென்றபோது, தலைக்கவசம், நீண்ட கை ஆடைகள் மற்றும் நீளமான காற்சட்டை போன்றவற்றைக் கழற்றுமாறு வைத்தியசாலை அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த ஆடைகளைக் கழற்றாவிட்டால் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் எச்சரிக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண்களில் மூவர் தங்களது மேலதிக ஆடைகளைக் கழற்றிய நிலையில், ஏனைய ஆறு பெண்களும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆடை விதிமுறைகளுக்கு இணங்குதல், வேறு இடத்துக்கு இடமாற்றம் பெறுதல் அல்லது பதவியை இராஜினாமா செய்தல் போன்ற தெரிவுகள் தங்களுக்கு வழங்கப்பட்டதாக ஆறு பெண்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், தாங்கள் வாய்மொழி ரீதியான துன்புறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், அரச நிர்வாகம் தொடர்பான நடைமுறைச் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலேயே சீருடை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சுற்றறிக்கைகளில் தடை இல்லை!

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திய மனித உரிமைகள் ஆணைக்குழு, 1989ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில், அரச ஊழியர்கள் மதத் தலைக்கவசங்கள் அல்லது மேலதிகமான அடக்கமான ஆடைகளை அணிவதற்குத் தெளிவான தடை எதுவும் விதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள மற்றொரு அரச வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இதேபோன்ற ஆடைகளை அணிந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளமையையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் சுற்றறிக்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, நியாயமற்ற மற்றும் பாரபட்சமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஒழுக்காற்று விசாரணையின்றி முறைப்பாட்டாளர்களை இடமாற்றம் செய்த தீர்மானமும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளன!

இலங்கை அரசியலமைப்பின் 10, 12(1), 12(2), 14(1)(e) மற்றும் 14(1)(g) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட மத சுதந்திரம், சமத்துவம், பாரபட்சமின்மை மற்றும் சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடும் உரிமை ஆகியவை மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

வைத்தியசாலை நிர்வாகத்துக்கு ஆணைக்குழு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது:

  • மதத் தலைக்கவசம், நீண்ட கை ஆடைகள் மற்றும் காற்சட்டை போன்றவற்றை சீருடையுடன் அணிய அனுமதிக்கும் வகையில் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வெளியிடுதல்.
  • ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்துதல்.
  • முறைப்பாடு செய்த ஆறு பெண் ஊழியர்களும் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்ற விரும்பினால், அதற்கான வாய்ப்பை வழங்குதல்.
  • அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினால், மத ஆடைகளை அணிந்து பணியாற்ற அனுமதித்தல்.

இதற்கு மேலதிகமாக, அரச ஊழியர்கள் தங்களது சீருடையுடன் மத ஆடைகளையும் அணிய அனுமதிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சுக்கும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேவேளை, ஊழியர்களின் முகத்தைத் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத ஆடைகள் தொடர்பில் நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, பணியிடங்களில் விரோதமான சூழலை உருவாக்குவதுடன், சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தையும் அதிகரித்து, தேசிய நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கக்கூடும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 2026 நவம்பர் 11ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore