உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான ஒக்டோபரை முன்னிட்டு, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், வீரமுனை கிளினிக் நிலையத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சுகாதாரக் கல்வி நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
கர்ப்பகால முன்கிளினிக்கிற்கு வருகை தந்த தாய்மார்களை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மார்பகப் புற்றுநோய் தொடர்பான அடிப்படைத் தகவல்கள், ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணுதல் மற்றும் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் (PHMM) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாகப் பங்கேற்று தாய்மார்களுக்கு சுகாதாரக் கல்வியை வழங்கினர்.
மார்பகத்தில் ஏற்படும் சந்தேகத்திற்கிடமான மாற்றங்களை அடையாளம் காண்பது, அவற்றைப் புறக்கணிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மற்றும் மார்பக ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்துவது தொடர்பாக இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, உரிய சிகிச்சையைத் திட்டமிடுவதற்கும் சிகிச்சை வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என சுகாதாரக் கல்வி வழங்கப்பட்டது.
பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து, ஆரம்ப அறிகுறிகள் குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான சுகாதாரக் கல்வி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.





