சம்மாந்துறை–அம்பாறை எல்லைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்!

வளத்தாப்பிட்டி வரம்பு விளைந்த வட்டையில் 29 ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கைக்குத் தடை – ஏ.சீ.எம். சஹில்

சம்மாந்துறைப் பிரதேசத்தின் காணி உரிமைகள் மற்றும் நிர்வாக எல்லைகளைப் பாதுகாப்பதுடன், சம்மாந்துறை–அம்பாறை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். சஹில் வலியுறுத்தியுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வு கடந்த 15ஆம் திகதி நடைபெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்மாந்துறை வளத்தாப்பிட்டி வரம்பு விளைந்த வட்டைப் பகுதியில் சுமார் 29 ஏக்கர் காணிகளில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்விடயத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சம்மாந்துறைப் பிரதேசத்தின் காணிகள் மற்றும் நிலங்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், காணி மற்றும் எல்லைகள் தொடர்பாகக் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் வழக்குகளையும் உரிய முறையில் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், சம்மாந்துறைப் பிரதேசத்தின் நிர்வாக எல்லைகளைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, சம்மாந்துறை மற்றும் அம்பாறை பிரதேசங்களுக்கு இடையிலான எல்லைகளைத் தெளிவாக அடையாளப்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அம்பாறை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய நிர்வாக விவகாரங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விடயங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வுகள் காணப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

காணி உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் எதிர்காலத்தில் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சட்டரீதியான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, எல்லைப் பிரச்சினைகள் மற்றும் பயிர்ச்செய்கைக்குத் தடையாக உள்ள காணி விவகாரங்களுக்குப் பொருத்தமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏ.சீ.எம். சஹில் மேலும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore