பிரித்தானியாவைத் தாக்கிய புயல்! 18,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு – பலத்த காற்று எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளைத் தாக்கியுள்ள ‘ஆஸ்டின்’ (Storm Austen) புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஜெர்சி மற்றும் கெர்ன்சி தீவுகளில் சிவப்பு நிற எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

18,000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு

புயலின் தாக்கத்தால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் சுமார் 18,000 வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கோர்ன்வால் பகுதியில் அதிகளவாக மின்தடை பதிவாகியுள்ளது. அங்கு 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெவோன் பகுதியில் சுமார் 1,700 சொத்துக்களுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காகப் பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் முறிந்த மரங்கள் – போக்குவரத்துப் பாதிப்பு

பலத்த காற்று காரணமாகப் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீதிகளிலும் வாகனங்களின் மீதும் விழுந்துள்ளன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள அங்கரிங் ரயில் நிலையத்தின் நடைமேடையில் மரமொன்று விழுந்ததால் ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடும் காற்று காரணமாக இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான சில படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நியூஹேவன்–டிப்பே மற்றும் டோவர்–கலேஸ் வழித்தடங்களில் சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸிலும் கடும் பாதிப்பு

‘ஆஸ்டின்’ புயல் பிரான்ஸின் வடமேற்கு மற்றும் கடலோரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனி மற்றும் நார்மண்டி பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. சில இடங்களில் கட்டடங்களின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

பிரான்ஸில் மின்சார விநியோக நிறுவனமான Enedis வெளியிட்ட தகவலின்படி, வெள்ளிக்கிழமை காலை சுமார் 161,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

பலத்த காற்று காரணமாக நான்ட்ஸ் விமான நிலையத்தில் சில விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், சில பாலங்களும் மூடப்பட்டுள்ளன.

பிரான்ஸின் பல மாவட்டங்களில் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகளில் மணிக்கு 130 முதல் 140 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புயல் தாக்கும் அபாயம்

இதற்கிடையில், ‘போய்லோ’ (Storm Boelo) எனப் பெயரிடப்பட்டுள்ள மற்றொரு புயல் சனிக்கிழமை முதல் பிரித்தானியாவின் பல பகுதிகளைத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலால் மணிக்கு 130 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், சில பகுதிகளுக்கு அம்பர் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுதல், மின்சார விநியோகம் பாதிக்கப்படுதல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இங்கிலாந்தின் டோர்செட் கடற்கரைப் பகுதியிலும் கடல் அலைகள் கரையைத் தாண்டி வரக்கூடிய அபாயம் காரணமாக வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கடற்கரை மற்றும் துறைமுகப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாகப் புயல் தாக்கங்கள் எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைக் கண்காணித்து அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore