பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய இந்திய நீதிமன்றம்

இந்தியாவின் குஜராத் மாநிலம், காந்திநகரில் பசுக்களைச் சட்டவிரோதமாகக் கொன்ற வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்கும்போது, பசுக்களின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகப் பண்டைய இந்து மத நூல்களான வேதங்கள் மற்றும் மனுஸ்மிருதி ஆகியவற்றிலிருந்து நீதிமன்றம் மேற்கோள்களைச் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திநகரிலுள்ள அமர்வு நீதிமன்றத்தின் மேலதிக அமர்வு நீதிபதி பி.ஆர். ராஜ்புத், அகமதாபாத்தைச் சேர்ந்த வாசிம் குரேஷி, முகமது ரஃபீக் குரேஷி மற்றும் அஸ்பாக் பஹெலிம் ஆகிய மூவருக்கும் கடுமையான ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

277 கிலோகிராம் மாட்டிறைச்சி கைப்பற்றல்

பழைய அல்லது பால் தராத பசுக்களையும் எருமைகளையும் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த மூவரும் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுக்களைச் சட்டவிரோதமாகக் கொன்றமை மற்றும் விலங்குகளுக்குக் கொடுமை இழைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்தில் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்ததுடன், விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 277 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டைய மத நூல்களை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

தீர்ப்பின் ஆரம்பப் பக்கங்களில் பசுக்களின் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுக்கள் பிரபஞ்சத்தின் தாயாக மதிக்கப்படுவதாகவும், அவற்றில் 33 கோடி தெய்வங்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் பண்டைய நூல்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனுஸ்மிருதி நூல் பசுவை வெறுமனே ஓர் விலங்காகக் கருதாமல், தர்மத்தின் முக்கிய அடையாளமாகக் குறிப்பிடுவதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசுக்களின் கலாசார மற்றும் மத முக்கியத்துவத்தை அறிந்திருந்தும், குற்றவாளிகள் அவற்றைக் கொன்று உடல் பாகங்களைத் துண்டித்ததாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்தில் பசுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

குஜராத் விலங்கு பாதுகாப்புத் திருத்தச் சட்டம் மற்றும் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதைத் தடுக்கும் சட்டம் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.

பசுக்களைக் கொல்வது போன்ற குற்றங்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படாவிட்டால், காலப்போக்கில் பசுக்கள் அழியும் அபாயம் ஏற்படலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore