மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் பயண நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து, 16 நாடுகளுக்கான தனது பயண ஆலோசனைகளை பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் (FCDO) புதுப்பித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 27) வெளியிடப்பட்ட இந்தப் புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலில், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை மிகவும் கணிக்க முடியாததாக இருப்பதாகவும், திடீர் பதற்ற அதிகரிப்புக்கான ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இடங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் மற்றும் ஏனைய தரப்பினரால் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தடைகள் மற்றும் விமானச் சேவை பாதிப்புகள் ஏற்படலாம்
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் அல்லது அந்நாடுகள் வழியாகப் பயணிக்கத் திட்டமிடும் பிரித்தானியப் பிரஜைகள், விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படுதல், வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயணத் தாமதங்கள் உள்ளிட்ட இடையூறுகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பயண எச்சரிக்கை பின்வரும் 16 நாடுகளுக்கான ஆலோசனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது:
- ஓமான்
- கட்டார்
- ஐக்கிய அரபு இராச்சியம் (UAE)
- பாகிஸ்தான்
- சிரியா
- யேமன்
- பஹ்ரைன்
- துருக்கி
- குவைத்
- ஜோர்தான்
- ஈராக்
- எகிப்து
- ஈரான்
- இஸ்ரேல்
- பலஸ்தீனம்
- சவூதி அரேபியா
சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல்
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி ஆயுதக் குழுவினரால் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 10ஆம் திகதி சவூதி அரேபியாவின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த விமான நிலையம் தொடர்ந்து இலக்காகக் கொள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13ஆம் திகதி முதல் ஹூதி குழுவினர் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்ஹா, ஜிசான், நஜ்ரான், ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் யன்பு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விமான நிலையங்கள், இராணுவ மற்றும் பாதுகாப்பு நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அதிக அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், விமானச் சேவைகள் பாதிக்கப்படுதல் மற்றும் இரத்துச் செய்யப்படுதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.





