இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1968ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அரசியல் பயணத்தின் ஊடாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராகவும், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவராகவும் வளர்ச்சியடைந்து, 2024ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
ஆரம்பக் கல்வியும் பல்கலைக்கழக வாழ்க்கையும்
அநுர குமார திசாநாயக்க தனது ஆரம்பக் கல்வியை அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்.
1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இணைந்த அவர், 1995ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டத்தைப் பெற்றார்.
பல்கலைக்கழகக் காலப்பகுதியிலேயே சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய அவர், மாணவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
அரசியல் பயணத்தின் ஆரம்பம்
1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் இடம்பெற்ற காலத்திலேயே அநுர குமார திசாநாயக்க மாணவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
1993ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (JVP) மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய காலப்பகுதியில், அவர் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார்.
1997ஆம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன், அதே ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிற்கும் தெரிவு செய்யப்பட்டார். 1998ஆம் ஆண்டு கட்சியின் அரசியல் பீடத்திலும் அவர் இடம்பெற்றார்.
1999ஆம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டதன் மூலம் தேர்தல் அரசியலில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பயணம்
2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அதனைத் தொடர்ந்து அப்போதைய அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2008ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாகவும் பணியாற்றினார்.
JVP தலைமைத்துவமும் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கமும்
2014ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் அநுர குமார திசாநாயக்க கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கிய அவர், 2019ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், பின்னர் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார்.
இலங்கையின் ஜனாதிபதியாக உயர்வு
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக்க, செப்டெம்பர் 23ஆம் திகதி இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பின்னணியிலிருந்து உருவான தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் புதிய அரசியல் ஆட்சி அமைந்தது.
மாணவர் அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சுப் பொறுப்பு எனப் பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து, இறுதியில் நாட்டின் உயரிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியை அடைந்துள்ள அநுர குமார திசாநாயக்க இன்று தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.





