எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள கிஸா (Giza) மாகாணத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று வீதியில் புரண்டு வெடித்துத் தீப்பற்றியதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (25) கெய்ரோ நகரைச் சுற்றியுள்ள ரிங் வீதியில், அல்-வார்ராக் (Al-Warraq) பகுதியில் உள்ள சுரங்கப்பாதைக்கு மேலான வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பவுசர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக எகிப்தின் பெற்றோலிய அமைச்சு தெரிவித்துள்ளது.
பவுசர் புரண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயினால் அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் தீ பரவியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததுடன், வீதியில் பயணித்த வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.
39 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைப்பு
விபத்து தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் எகிப்தின் சுகாதார அமைச்சு அவசர மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு 39 அவசர ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மூன்று வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் தீக்காயங்களுக்கு உள்ளானவர்களும், புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
27 வாகனங்கள் தீக்கிரை
ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்களின்படி, பவுசர் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் அது வீதியிலிருந்து விலகி, கான்கிரீட் தடுப்பில் மோதிய பின்னர் வெடித்துத் தீப்பற்றியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சுமார் 27 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி இரங்கல்
சம்பவம் தொடர்பில் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah el-Sisi) தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவையும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எகிப்தின் பொது வழக்கறிஞர் அலுவலகம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கான காரணம், பவுசரின் இயக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எகிப்தில் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டில் மாத்திரம் அந்நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5,829 பேர் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது 2024ஆம் ஆண்டில் பதிவான 5,260 உயிரிழப்புகளை விட அதிகமாகும்.
எரிபொருள் பவுசர் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தப் பாரிய தீ விபத்து, அந்நாட்டின் வீதிப் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.





