அமெரிக்காவில் விமானம் கடலில் விழுந்து விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலக் கடற்கரைப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு சிறுவர்கள் உட்பட அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) இடம்பெற்ற இந்த விபத்தில், நான்கு பெரியவர்களும் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Cessna 210L ரக விமானம், லூசியானா மாநிலத்தின் நியூ ஓர்லியன்ஸ் லேக்ஃபிரண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் ஃபோர்ட் மியர்ஸில் உள்ள பேஜ் ஃபீல்ட் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ளது.

இந்நிலையில், பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்துடனான (FAA) விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் விமானம் நிமிடத்திற்கு சுமார் 10,000 அடி வேகத்தில் கீழிறங்கியதாக விமானப் பயணத் தரவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அமெரிக்கக் கடலோரக் காவல்படையினர் மற்றும் மிசிசிப்பி கடல் வளத் திணைக்களத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர், ஹோர்ன் தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் விமானத்தின் உடற்பகுதி உள்ளிட்ட பல சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், மூன்று உயிர்காப்பு அங்கிகள் மற்றும் ஒரு உயிர்காப்புப் படகும் மீட்கப்பட்டன.

ஆரம்பத்தில் பயணிகள் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், பின்னர் மிசிசிப்பி கடல் வளத் திணைக்களத்தின் நீர்மூழ்கி மீட்புக் குழுவினர் விமானத்தின் உடற்பகுதிக்குள் ஆறு பேரினதும் சடலங்களைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நிறைவடைந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.

“இது மிகவும் வேதனையான முடிவாகும். இந்த இழப்பை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைப் பொறுப்பாளர் கமாண்டர் ட்ரெவர் ப்ளவுண்ட் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான 1972ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Cessna 210L ரக விமானம், புளோரிடாவின் கேப் கோரல் பகுதியில் உள்ள EAB Services நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விமானத்தின் பயணப் பதிவுகளின்படி, விபத்துக்கு முந்தைய நாட்களிலும் குறித்த விமானம் பல்வேறு இடங்களுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) முன்னெடுத்து வருகின்றது. விசாரணைக்கு FAA நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore