தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடோரில் அதிதீவிர எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கத்தினால் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து, பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகள், வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
கடந்த பல வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால், கொலம்பியா எல்லைப் பகுதியிலிருந்து வடக்கு பெரு வரையிலான பசுபிக் கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெருவில் இடுப்பளவு வரை வெள்ளம்
பெருவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பியூரா (Piura) நகரில் 24 மணித்தியாலங்களில் 143 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் பதிவான வரலாற்றுச் சிறப்புமிக்க மழைவீழ்ச்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக நகரின் பல வீதிகளில் இடுப்பளவு வரை வெள்ளநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகப் பெரு ஜனாதிபதி கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) தெரிவித்துள்ளார். மேலும், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளின் மேல் தளங்களிலும் கூரைகளிலும் தஞ்சமடைந்து மீட்புக்காகக் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், டும்பெஸ் (Tumbes) ஆறு பெருக்கெடுத்ததால் பெருவின் முக்கிய வடக்கு–தெற்கு போக்குவரத்துப் பாதையான பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையின் (Pan-American Highway) ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பியூரா மற்றும் டும்பெஸ் பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையை வானிலை அதிகாரிகள் திங்கட்கிழமை வரை நீடித்துள்ளனர். மேலும் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈக்வடோரில் 34 பேர் உயிரிழப்பு
இதேவேளை, ஈக்வடோரில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இதுவரை குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக, எஸ்மரால்டாஸ் (Esmeraldas) மாகாணத்தில் இரண்டு ஆறுகள் பெருக்கெடுத்து கரைகளை உடைத்ததைத் தொடர்ந்து, ஆபத்தான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 50க்கும் மேற்பட்ட வீதிப் பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்துள்ளன. அவற்றில் சில வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன. தலைநகர் குயிட்டோவையும் (Quito) பசுபிக் கடற்கரையையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மான்டா (Manta) உள்ளிட்ட நகரங்களிலும் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சில இடங்களில் மக்கள் மார்பளவு நீரில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கும் பாதிப்பு
ஈக்வடோரில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்படக்கூடிய வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பெப்ரவரி வரை நீடிக்கக்கூடும் எல் நினோ தாக்கம்
பசுபிக் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ காலநிலை நிகழ்வு, உலகின் பல்வேறு பகுதிகளில் மழைவீழ்ச்சி, வெப்பநிலை மற்றும் காற்றின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
தற்போதைய எல் நினோ தாக்கம் அதிதீவிர நிலையை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை அதன் தாக்கம் நீடிக்கக்கூடும் எனவும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் விளைவாக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்ச்செய்கை பாதிப்பு மற்றும் மீன்பிடி உற்பத்தி குறைவு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பெருவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளும் நிலைமையைச் சமாளிப்பதற்காக தேசிய அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளன.
தொடர்ச்சியான மழை, ஆறுகளின் நீர்மட்ட உயர்வு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக அடுத்துவரும் நாட்களிலும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





