சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட காற்றுக் கசிவு பிரச்சினை காரணமாக அவசர வெளியேற்ற எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருந்த விண்வெளி வீரர்கள், தற்போது மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாசாவின் Crew-12 குழுவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் – இரு அமெரிக்கர்கள், ஒரு பிரெஞ்சு வீரர் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் – அவசர நிலை ஏற்பட்டால் வெளியேறத் தயாராக SpaceX Crew Dragon விண்கலத்திற்குள் சென்று பாதுகாப்பு உடைகளை அணியுமாறு முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், ரஷ்ய விண்வெளி நிறுவனம் Roscosmos மேற்கொண்டிருந்த பழுதுபார்ப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கிடைத்துள்ள தரவுகள் மற்றும் அளவீடுகள் மதிப்பாய்வு செய்யப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, விண்வெளி வீரர்கள் மீண்டும் தங்களது திட்டமிட்ட பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ISS-இன் ரஷ்ய பிரிவான Zvezda சேவைத் தொகுதியில் நீண்டகாலமாக சிறிய அளவிலான காற்றுக் கசிவுகள் பதிவாகி வந்த நிலையில், கடந்த வாரம் அந்த கசிவு அளவு அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Roscosmos வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆக்சிஜன் கசிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று வெற்றிகரமாக மூடப்பட்டுள்ளதுடன், மற்றொன்றை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த கசிவுகள் தொடர்பாக நிரந்தர தீர்வை எட்டுவதற்காக நாசாவும் Roscosmos நிறுவனமும் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





