பாராளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் Harsha de Silva, குடியிருப்பு (Resident) மற்றும் வெளிநாட்டு (Non-Resident) டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கிடையிலான வரி விதிப்பில் நிலவும் வேறுபாடு குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“இந்த விடயத்தில் COPF குழுவிற்கே தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு முன் அரசு இதை விளக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், முழு பரிவர்த்தனை பெறுமதியின் அடிப்படையில் வரி செலுத்துகின்றனர். ஆனால் வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்கள், தாங்கள் பெறும் கமிஷன் தொகைக்கு மட்டுமே வரி செலுத்துகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
கணக்கியல் ரீதியில் இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், பொருளாதார மற்றும் தேசிய அபிவிருத்தி நோக்கில் பார்க்கும்போது இது சமநிலையற்ற நிலையை உருவாக்குவதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்க காலத்தில், உற்பத்தி செய்யப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், சேவை பயன்படுத்தப்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்க வேண்டும் என COPF பரிந்துரைத்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
அந்தக் கொள்கை தற்போது நடைமுறைக்கு வந்திருந்தாலும், வரி விதிப்பில் சமநிலை உறுதி செய்யப்படாவிட்டால் உள்நாட்டு சேவை வழங்குநர்கள் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.
வரி வலையமைப்பை விரிவுபடுத்தவும், வரி இணக்கத்தை (Tax Compliance) வலுப்படுத்தவும் நோக்கமுடைய VAT திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (23) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.





