இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 30) நிகழ்ந்த அடுத்தடுத்த கோர வீதி விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – குருணாகல் வீதியின் ரஞ்சனகம பகுதியில் நேற்று பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இருவராவர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை – திவுலபிட்டிய வீதியின் பல்லபான பகுதியில், திவுலபிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹொரகஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞராவார். விபத்து தொடர்பில் கார் மற்றும் வேன் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பதேனிய – அனுராதபுரம் வீதியின் தலகாகம பகுதியில், பதேனிய நோக்கி பயணித்த வேன் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொன்கிரீட் வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது, வேனில் பயணித்த மூன்று பெண்கள் காயமடைந்து மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மூதாட்டி உயிரிழந்தார். ஏனைய இரு பெண்களும் மேல் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வேயங்கொடை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனுராதபுரம் – திசாவெவ வீதியில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்கள் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து பயணித்த பெண் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணாவார். சம்பவம் தொடர்பில் கேப் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அத்துருகிரிய – கொட்டாவை வீதியின் வல்கம பகுதியில், அத்துருகிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து எதிரே வந்த ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார். சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.





