சித்திரவதைத் தடுப்பிற்கான ஐக்கிய நாடுகள் துணைக்குழு (SPT) தனது இரண்டாவது இலங்கை விஜயத்தை ஜூன் 24, 2026 அன்று நிறைவு செய்துள்ளது. 10 நாட்கள் நீடித்த இந்த விஜயத்தில் அரசு உயரதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், மனித உரிமை ஆணையம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பல்வேறு சந்திப்புகள் இடம்பெற்றன.
வெளிநாட்டு அமைச்சகத்தின் தகவலின்படி, நான்கு பேர் கொண்ட இந்த குழு, தடுப்பு மையங்களுக்கு தடையற்ற அணுகலை வழங்கியதற்காக இலங்கை அரசின் ஒத்துழைப்பை பாராட்டியதுடன், தங்களது ஆரம்பக் கண்டறிதல்களை அரசாங்க மற்றும் பங்குதாரர்களுடன் பகிர்ந்துள்ளது.
விஜயத்தின் போது, SPT குழு வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்தது. அரசு “சித்திரவதை இல்லா கொள்கை”க்கு உறுதியாக இருப்பதாகவும், மனித உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும், பாதுகாப்பு, சுகாதாரம், காவல்துறை, சிறைச்சாலை, குடிவரவு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயரதிகாரிகளுடனும் குழு கலந்துரையாடியது.
இலங்கையில் சித்திரவதை தடுப்பு தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டுவருவதாக அரச தரப்பு விளக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின் முடிவில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில், SPT குழு இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டியதுடன், எதிர்கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தங்களது ஆரம்பக் கருத்துக்களையும் வழங்கியுள்ளது.





