யாழில் டெங்கு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த வருடமும், நடப்பு வருடத்தின் ஜூன் மாத இறுதிப்பகுதி வரையும் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

தற்போது நாட்டின் தென்பகுதி மற்றும் ஏனைய பல மாகாணங்களில் டெங்கு நோயின் பரவல் மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது.

இந்த பின்னணியில், ஜூலை மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 65 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஒரு சடுதியான அதிகரிப்பாகும்.

மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று வருகின்றனர். அதேபோன்று, பலர் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளனர்.

“அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணத்திற்கு வரும்போது, பலர் டெங்கு நோய்த்தாக்கத்துடன் வந்து இங்குள்ள வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore