பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ICC ஆண்கள் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதையடுத்து, பாபர் அசாம் 5 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த போட்டியில் அவர் 88 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். 2024 செப்டெம்பர் மாதத்தில் Top 10 இலிருந்து வெளியேறியிருந்த பாபர், தற்போது மீண்டும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் 11ஆம் இடத்திற்கு சரிந்துள்ளார்.
மேலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபீக் 25 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தை பிடித்துள்ளார். அவர் தொடரின் Player of the Match விருதையும் பெற்றார்.
பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகளின் ஷமார் ஜோசப் 19ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், பாகிஸ்தானின் சஜித் கான், முகமது அலி மற்றும் அலி உஸ்மான் ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இதேவேளை, ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா 87.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாபிரிக்கா 75.00 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.





