சிம்பாப்வேயில் சோகம் – படகு கவிழ்ந்து 15 பேர் பலி!

சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி, சிம்பாப்வே மற்றும் அதன் அண்டை நாடான ஜாம்பியா ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

நீரின் கொள்ளளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியான இது, 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும் ஜாம்பேசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இதனால் ஒரு பள்ளத்தாக்கு மெதுவாக நீரால் நிரப்பப்பட்டு மிகப்பெரிய ஏரியாக மாறியது. தற்போது இது 200 கி.மீ-க்கும் அதிகமான நீளமும், சில இடங்களில் 40 கி.மீ வரை அகலமும் கொண்டதாக உள்ளது.

சிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இந்த ஏரியை பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ எல்லை ஏரியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 27 பேர் மாயமாகி உள்ளனர். இதனை அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஏரியில் இருந்து 77 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு விற்பனையின் அடிப்படையில், 114 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் மட்டுமே படகில் இருந்ததை உறுதிப்படுத்த முடிவதாக சிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் பயணச்சீட்டு தேவைப்படாத வயதுடைய குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும், அவர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படகு 90 பேர் பயணிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினரான முட்சா முரோம்பெட்ஸி (Mutsa Murombedzi) ஒரு காணொளியை வெளியிட்டார்.

அதில், பழமையானதாக தோன்றும் அந்த படகு தனது பயணத்தைத் தொடங்கியபோது, கரையில் இருந்தவர்கள் அதற்கு விடை கொடுக்கும் வகையில் கைகளை அசைப்பது பதிவாகியுள்ளது. கிராமப்புற மக்கள் கரிபா நகரத்திற்கு செல்ல ஏரி வழியாக இந்தப் படகை பயன்படுத்துவதாக அவர் கூறினார். ஏரியில் வீசும் பலமான அலைகளை அந்த படகு தாங்குமா என்பது குறித்து கரையில் நின்றிருந்த சிலர் கவலை தெரிவித்ததையும் அந்த காணொளி காட்டுகிறது.

முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சிம்பாப்வே பொலிஸார் தெரிவித்தனர், ஆனால் வேறு எந்த விவரங்களையும் அவர்கள் வழங்கவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore