நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி தொடர்பாக 2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு 12, நீதிமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அலுவலகத்தில், ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி, மின்சார உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத செயல்பாடுகளை ஆராய்வதற்காக இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொதுமக்கள் அறிவிப்பின் மூலம், இந்த விவகாரம் தொடர்பாக தகவல்கள் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தகைய தகவல்கள் 2026 மே 22 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






