மஜீட். ARM
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து உயர்கல்வி, தொழில் மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக சம்மாந்துறை பகுதிக்கு வருகை தருபவர்கள் மூலம் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ள சுகாதாரப் அதிகாரிகள், குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து வருபவர்கள் தங்களின் வருகையைத் தொடர்ந்து குறைந்தது 14 நாட்களுக்கு பகல் வேளைகளில் நுளம்பு கடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் பகல் வேளைகளில் உடல் முழுவதையும் மூடிய ஆடைகளை அணிவதோடு, நுளம்பு விரட்டி கிரீம்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், காலம் தாழ்த்தாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவ நிலையத்திற்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
“நமது ஊரின் ஆரோக்கியம் நமது கைகளிலேயே உள்ளது”
என்பதை உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்வதோடு, இதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நுளம்புக் களத் தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்மாந்துறை சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.






