13 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கி மனைவியைத் தேடும் ஜப்பானிய கணவர்

2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய பேரழிவான சுனாமியில் காணாமல் போன தனது மனைவியை, கணவர் ஒருவர் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கடலுக்குள் மூழ்கித் தேடி வருகிறார்.

ஜப்பானின் மியாகி மாகாணத்தைச் சேர்ந்த யசுவோ தகமாட்சு என்பவரே தனது மனைவி யூகோவை தொடர்ந்து தேடி வருகிறார்.

ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டு முறை சிறிய மீன்பிடிப் படகில் கடலுக்குச் செல்லும் அவர், முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் எடை பெல்ட்டை அணிந்து கடலுக்குள் மூழ்குகிறார்.

சுனாமியில் காணாமல் போன மனைவி

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளை தாக்கிய மிகப்பெரிய சுனாமியின் போது, யூகோ தனது பணியிடத்தில் இருந்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது, யூகோவும் அவருடன் பணியாற்றிய 12 பேரும் கட்டிடத்தின் கூரைக்குச் சென்றனர்.

அதற்கு முன்னர் யசுவோ தனது மனைவியை பணியிடத்தில் இறக்கிவிட்டு சென்றிருந்தார். அப்போது இருவரும் இரவு உணவிற்கு என்ன சாப்பிடுவது என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் யூகோ தனது கணவருக்கு, “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அந்தச் செய்தியைப் பார்த்த யசுவோ, தனது மனைவி பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தார். ஆனால் மறுநாள் உயிர் பிழைத்தவர்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனைக்குச் சென்றபோது, யூகோ அங்கு இல்லை.

சுனாமி அவரை அடித்துச் சென்றுவிட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

கடலுக்குள் தேடத் தொடங்கிய பயணம்

யூகோவைத் தேடும் நடவடிக்கைகளில் கடலோரக் காவல்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் ஈடுபட்டதை இரண்டு ஆண்டுகளாக பார்த்த யசுவோ, பின்னர் தானும் நீச்சல் மற்றும் டைவிங் பயிற்சி பெற முடிவு செய்தார்.

“தொடர்ந்து கடலில் மூழ்கித் தேடிக்கொண்டிருந்தால், ஒருநாள் நான் அவரைச் சந்திக்க முடியும் என்று உணர்ந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தனது 50 மற்றும் 60 வயதுகளில் இதுவரை 760க்கும் மேற்பட்ட முறை கடலுக்குள் மூழ்கியுள்ள அவர், தற்போது தனது 763ஆவது கடல் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு இது ஒரு நினைவுகூரல்

யூகோவின் உடல் இதுவரை மீட்கப்படாததால், வழக்கமான முறையில் அவரது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்த யசுவோவால் முடியவில்லை.

அதற்கு பதிலாக, கடலுக்குள் சென்று தனது மனைவியைத் தேடும் பயணம் அவருக்கு ஒரு வகையான நினைவுகூரலாகவும், அவருடன் தொடர்பைத் தொடரும் வழியாகவும் மாறியுள்ளது.

“அவர் கல்லறையில் இல்லை. அவரைச் சந்திக்கச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என யசுவோ தெரிவித்துள்ளார்.

கடலுக்கடியில் சுமார் 50 மீற்றர் ஆழம் வரை சென்று தேடும் அவர், சுனாமிக்குப் பின்னர் கடலுக்கடியில் கிடக்கும் இடிபாடுகளையும் காண்கிறார்.

சில நேரங்களில் அந்தக் காட்சிகள் அவரை மிகவும் வேதனைப்படுத்துகின்றன. இருப்பினும், அவர் கடலை வெறுக்கவில்லை எனக் கூறுகிறார்.

“கடல் பல சுவையான உணவுகளையும் அழகான காட்சிகளையும் நமக்கு வழங்குகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் கடந்தும் தனது மனைவியைத் தேடும் இந்தப் பயணத்தை யசுவோ தொடர்ந்து வருகிறார்.

அவரது வாழ்க்கையில் கடலும், யூகோவின் நினைவும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore