மன்னார் படுகையில் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு – இலங்கை பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்பா?

இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறிந்து பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, நான்கு ஆழ்கடல் ஆய்வுத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்கும் ‘Sri Lanka Licensing Round 2026 – SL2026-01’ என்ற சர்வதேச ஏலச் சுற்றை இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நான்கு கடல்சார் ஆய்வுத் தொகுதிகள் தகுதியான சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மன்னார் படுகையில் பெட்ரோலிய அமைப்பு இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், புதிய ஆய்வுகள் மூலம் அதன் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

9 டிரில்லியன் கன அடி எரிவாயு – உண்மையில் என்ன?

இலங்கை அதிகாரிகளின் தற்போதைய மதிப்பீட்டின்படி, மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருக்கக்கூடிய வளத்திறன் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு கிடைக்கப்பெற்ற புவியியல் மற்றும் பெட்ரோலியத் தரவுகளின் அடிப்படையிலானது.

எனினும், இந்த 9 டிரில்லியன் கன அடி என்பது இலங்கையின் கையிருப்பில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு வணிக ரீதியாக எடுக்கத் தயாராக உள்ள இயற்கை எரிவாயுவின் அளவு என்று பொருள் கொள்ள முடியாது.

எந்த அளவு வளத்தை உண்மையில் துளையிட்டு எடுக்க முடியும், அதற்கான செலவு எவ்வளவு, எரிவாயுவின் தரம், கிணறுகளின் வெற்றி விகிதம், கடலின் ஆழம், சந்தை விலை மற்றும் முதலீட்டாளர்களுக்கான ஒப்பந்த நிபந்தனைகள் போன்ற பல காரணிகளே இறுதியில் அதன் வணிக மதிப்பை தீர்மானிக்கும்.

இதனால், “9 டிரில்லியன் கன அடி” என்பது மிகப்பெரிய சாத்தியமான வளத்திற்கான மதிப்பீடாக பார்க்கப்பட வேண்டும்; உறுதியான வருமானமாக அல்ல.

2011ஆம் ஆண்டு கிடைத்த முக்கிய கண்டுபிடிப்பு

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுகள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன.

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, 1960களிலிருந்தே இலங்கையின் வடமேற்கு கடற்பகுதியில் நிலநடுக்கவியல் மற்றும் துளையிடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பின்னர் இந்தியாவின் Cairn Lanka நிறுவனம் மன்னார் படுகையில் ஆய்வுகளை மேற்கொண்டது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைக் கிணறுகளில் இரண்டில் Dorado மற்றும் Barracuda எனப்படும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் இடம்பெற்றதாக PDASL தெரிவிக்கிறது.

இவை மன்னார் படுகையில் செயல்படும் பெட்ரோலிய அமைப்பு இருப்பதற்கான முக்கிய அறிவியல் ஆதாரங்களாக கருதப்படுகின்றன.

இலங்கையின் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய இயற்கை எரிவாயு கொள்கை ஆவணத்திலும், Dorado மற்றும் Barracuda கண்டுபிடிப்புகள் 2011ஆம் ஆண்டு Cairn நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகவும், நவீன 2D மற்றும் 3D நிலநடுக்கவியல் தரவுகள், கிணறு பதிவுகள் மற்றும் பாறை மாதிரிகளின் அடிப்படையில் எரிவாயு வளத்திற்கான சாத்தியக்கூறுகள் மதிப்பிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் Cairn நிறுவனம் வெளியேறியது?

2011ஆம் ஆண்டு கண்டுபிடிப்புகள் இடம்பெற்றபோதிலும், அவை உடனடியாக வணிக உற்பத்தியாக மாற்றப்படவில்லை.

முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்ட வளங்களின் அளவு, அன்றைய உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலை நிலவரம் மற்றும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிக்கான அதிக முதலீட்டு தேவைகள் போன்றவை வணிக ரீதியான முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் Cairn நிறுவனம் இலங்கையில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து வெளியேறியது.

ஆனால் அந்த நிறுவனம் சேகரித்த கிணறு தரவுகள் மற்றும் இலங்கையிடம் ஏற்கனவே இருந்த பழைய நிலநடுக்கவியல் தரவுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பழைய தரவுகளுக்கு புதிய தொழில்நுட்பம்

தற்போதைய முயற்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தரவுகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீளாய்வு செய்வதாகும்.

PDASL தற்போது 2D மற்றும் 3D நிலநடுக்கவியல் தரவுகள், கிணறு பதிவுகள், ஈர்ப்பு மற்றும் காந்த தரவுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் தரவுகளை நிர்வகித்து வருகிறது.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, இலங்கையின் தேசிய பெட்ரோலிய தரவுத்தளத்தில் பழைய மற்றும் புதிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட பரந்த அளவிலான தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. தகுதியான முதலீட்டாளர்களுக்கு இந்த தரவுகளை தொழில்நுட்ப ரீதியாக மதிப்பிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம், புதிய கிணறுகளை உடனடியாக தோண்டுவதற்கு முன்பாக, எந்த பகுதிகளில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச முதலீட்டாளர்களை எதிர்பார்க்கும் இலங்கை

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஏலச் சுற்றில் மன்னார் படுகையின் நான்கு கடல்சார் தொகுதிகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகள் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. முன்னைய ஆய்வுகள் மூலம் பெட்ரோலிய அமைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதிய முதலீட்டாளர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

PDASL-ன் முதலீட்டு நடைமுறையின்படி, முதலீட்டாளர்கள் முதலில் கிடைக்கப்பெறும் புவியியல் மற்றும் தொழில்நுட்ப தரவுகளை ஆய்வு செய்து, குறிப்பிட்ட தொகுதிகளின் வணிக சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவார்கள். அதன் பின்னர் ஏலச் சமர்ப்பிப்புகள் மதிப்பிடப்பட்டு, தகுதியான முதலீட்டாளர்களுடன் பெட்ரோலிய வள ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு என்ன பயன்?

மன்னார் படுகையில் வணிக ரீதியாக எடுக்கக்கூடிய அளவில் எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டால், அது இலங்கையின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

தற்போது இலங்கை தனது எரிபொருள் தேவையின் முக்கியமான பகுதியை இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்கிறது. உள்நாட்டிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய முடிந்தால், எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வேண்டிய எரிபொருளின் அளவை குறைக்கக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.

அதன் மூலம் வெளிநாட்டு நாணயச் செலவைக் குறைப்பது, மின்சார உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு உள்நாட்டு எரிவாயுவை பயன்படுத்துவது, புதிய தொழில்நுட்பத் திறன்களை உருவாக்குவது மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது போன்ற பல்வேறு பொருளாதார வாய்ப்புகள் உருவாகலாம்.

PDASL-மும் உள்நாட்டு பெட்ரோலிய வளங்களின் வளர்ச்சி மூலம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதிக்கான செலவைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால நன்மைகளை உருவாக்க முடியும் எனக் குறிப்பிடுகிறது.

ஆனால் மிகப்பெரிய சவால் – முதலீடு

மன்னார் படுகையில் வளம் இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அதை கடலுக்கு அடியில் இருந்து வணிக ரீதியாக எடுத்து வருவது மிகவும் செலவான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான பணியாகும்.

ஆழ்கடல் துளையிடல், உற்பத்தி தளங்கள், குழாய்கள், சேமிப்பு வசதிகள், கடல்சார் பாதுகாப்பு, எரிவாயு பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் மின்சார அல்லது தொழில்துறை பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படலாம்.

இதனால், “வளம் இருக்கிறதா?” என்ற கேள்வியைக் கடந்தும், “அதை எவ்வளவு செலவில் எடுக்க முடியும்?”, “அதிலிருந்து எவ்வளவு வருமானம் கிடைக்கும்?” மற்றும் “சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் வணிக ரீதியாக கவர்ச்சிகரமானதா?” என்பவையே முக்கியமான கேள்விகளாக மாறுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம்

மன்னார் வளைகுடா கடல் சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

எண்ணெய் அல்லது எரிவாயு ஆய்வுகள் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளின்போது எண்ணெய்க் கசிவு அல்லது பிற கடல்சார் விபத்துகள் ஏற்பட்டால், கடல் உயிரினங்கள் மற்றும் மீன்வளத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் சுற்றுச்சூழல் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி பல குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால், ஆழ்கடல் ஆய்வுகளின்போது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் சூழலை பாதுகாப்பது முக்கியமானதாக இருக்கும்.

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையும் பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான முறையில் வளங்களை மேம்படுத்துவதை தனது ஒழுங்குமுறை நோக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.

இந்தியப் பெருங்கடலில் புவிசார் முக்கியத்துவம்

மன்னார் படுகை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் பொருளாதார விவகாரமாக மட்டுமன்றி கடல்சார் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் கொண்டதாகவும் பார்க்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், எந்த நாடு அல்லது நிறுவனம் எதிர்காலத்தில் இந்த வளங்களை மேம்படுத்தும் என்பது தற்போது தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல. சர்வதேச முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், முதலீட்டு செலவு, சட்ட அமைப்பு, சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானம் உள்ளிட்ட பல காரணிகளை மதிப்பீடு செய்த பின்னரே முதலீட்டு முடிவுகளை எடுப்பார்கள்.

அடுத்த கட்டம் என்ன?

2026ஆம் ஆண்டுக்கான SL2026-01 ஏலச் சுற்று, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த மன்னார் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மீண்டும் சர்வதேச முதலீட்டு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் தற்போது பழைய ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி, அவற்றை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீளாய்வு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2011ஆம் ஆண்டு Dorado மற்றும் Barracuda பகுதிகளில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மன்னார் படுகையின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆனால் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு மற்றும் 2 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலிய வளம் என்ற மதிப்பீடு மட்டும் இலங்கையின் பொருளாதாரத்தை உடனடியாக மாற்றிவிடும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல.

முதலில் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பின்னர் விரிவான ஆய்வுகள் மற்றும் துளையிடல்கள் மூலம் வளத்தின் உண்மையான அளவு மற்றும் தரம் உறுதி செய்யப்பட வேண்டும். அதன்பிறகு வணிக ரீதியான உற்பத்தி சாத்தியமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

எனவே, மன்னார் படுகை இலங்கைக்கு ஒரு முக்கியமான இயற்கை வள வாய்ப்பாக இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை உண்மையான பொருளாதார பலனாக மாற்றுவதற்கு முதலீடு, தொழில்நுட்பம், சட்டத் திட்டம், வெளிப்படையான வள நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

மன்னார் கடலடியில் உள்ளதாக மதிப்பிடப்படும் வளம் இலங்கையின் எதிர்கால எரிசக்தி பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் எவ்வளவு பங்களிக்கும் என்பது, தற்போது தொடங்கியுள்ள ஆய்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளின் வெற்றியிலேயே தங்கியுள்ளது.
BBC தமிழ்;

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore