உலகளாவிய எரிசக்தி சந்தையில் டீசல் விநியோகம் தொடர்பான நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவசர ஆலோசனைகளை நடத்தியுள்ளன.
ஈரான் தொடர்பான போர் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தடைகள், ரஷ்யா–உக்ரைன் போர் காரணமான எரிபொருள் சந்தை பாதிப்புகள், மேலும் சில நாடுகளின் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவை உலகளாவிய டீசல் விநியோகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணியில் அமெரிக்காவில் டீசல் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், ஐரோப்பாவிலும் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள அவசரகால டீசல் கையிருப்பில் ஒரு பகுதியை சந்தைக்கு விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க நிர்வாகம் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிடம் அவசரகால டீசல் கையிருப்பை குறைத்து சந்தைக்கு எரிபொருளை வழங்குமாறு கேட்டுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரக் கூட்டம்
இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஆணைக்குழுவும் இணைந்து டீசல் விநியோக நிலைமை குறித்து அவசர ஆலோசனைகளை மேற்கொண்டன.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் இணைந்து அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஒருங்கிணைந்த பதிலை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளன. இதன் மூலம் ஒருபுறம் டீசல் விலையை கட்டுப்படுத்தவும், மறுபுறம் எதிர்கால விநியோகத் தடைகளை சமாளிப்பதற்குத் தேவையான அவசரகால கையிருப்பை பாதுகாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
50 மில்லியன் பீப்பாய்கள் டீசல்?
இந்த விவகாரத்தில் பிரான்ஸ் முன்வைத்துள்ள ஒரு திட்டம் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் விவாதித்துள்ளதாக Reuters தெரிவித்துள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய நாடுகள் தங்களது கையிருப்பிலிருந்து சுமார் 50 மில்லியன் பீப்பாய்கள் டீசலை சந்தைக்கு விடுவிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உறுப்பினர்கள் மேலும் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வெளியிடும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கையிருப்பில் உள்ள எரிபொருளை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் உலகளாவிய விநியோகத்தை அதிகரித்து, விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அவசரகால கையிருப்பு என்பது எதிர்கால விநியோகத் தடைகள் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்புக்காக வைத்திருக்கும் முக்கியமான வளமாகும். எனவே, எவ்வளவு அளவு கையிருப்பை வெளியிடுவது என்பது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் கவனமாக பரிசீலித்து வருகின்றன.
அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதி தடையா?
அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் நிர்வாகம் உள்நாட்டு சந்தையில் விலையை குறைப்பதற்காக அமெரிக்க டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் சாத்தியத்தை பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா உலக சந்தையில் முக்கியமான டீசல் ஏற்றுமதியாளராக இருப்பதால், அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி குறைக்கப்பட்டால் ஐரோப்பா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் எரிபொருள் விநியோகத்தில் மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தையும் விவசாய அறுவடை காலத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில், டீசல் தேவையும் அதிகரிக்கக்கூடும். டீசல் என்பது வாகனங்களுக்கு மட்டுமன்றி, லொறிகள், விவசாய இயந்திரங்கள், கட்டுமானத் துறை, கப்பல்கள் மற்றும் மின்சார உற்பத்திக்கான அவசர ஜெனரேட்டர்கள் போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் டீசல் விலையில் ஏற்படும் அதிகரிப்பு போக்குவரத்து செலவு மற்றும் உற்பத்திச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான பதில்
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட டீசல் ஏற்றுமதி தடையின் எச்சரிக்கையை ஏற்கவில்லை.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் அன்னா-கைசா இத்கோனென், அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதி தடை குறித்த அச்சுறுத்தலை ஐரோப்பிய ஒன்றியம் “முழுமையாக நிராகரிப்பதாக” தெரிவித்துள்ளார்.
அத்தகைய தடை யாருக்கும் பயனளிக்காது என்றும், அது அமெரிக்காவை நம்பகமான கூட்டாளியாகக் கருதும் ஐரோப்பாவின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
G7 நாடுகளும் நடவடிக்கைக்கு தயாராகின்றன
இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாண்டி G7 நாடுகளின் மட்டத்திலும் கவனம் பெற்றுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பில் G7 தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான காணொளி மாநாட்டை ஏற்பாடு செய்ததாக Reuters தெரிவித்துள்ளது.
பின்னர் வெளியான தகவல்களின்படி, G7 நாடுகள் சர்வதேச எரிசக்தி முகமை ஊடாக கச்சா எண்ணெய் மற்றும் டீசல் உள்ளிட்ட சுமார் 100 மில்லியன் பீப்பாய்கள் எரிபொருள் கையிருப்பை வெளியிடும் திட்டத்தில் இணக்கம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் உலக சந்தையில் குறைந்துள்ள எரிபொருள் விநியோகத்தை அதிகரித்து, விலை அழுத்தத்தை குறைப்பதே நோக்கமாகக் கூறப்படுகிறது.
உலக சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கம்
டீசல் விநியோக நெருக்கடி தொடர்ந்தால் அதன் தாக்கம் எரிபொருள் விலையைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் ஏற்படலாம்.
போக்குவரத்து, விவசாயம், உணவு விநியோகம், கட்டுமானம் மற்றும் தொழில்துறை உற்பத்தி போன்ற துறைகள் டீசலை அதிகளவில் சார்ந்துள்ளன. எனவே டீசல் விலை உயர்ந்தால் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு செல்லும் செலவும் அதிகரிக்கக்கூடும்.
இதனால் உலகின் பல பகுதிகளில் பொருட்களின் விலை உயர்வுக்கும் பணவீக்க அழுத்தத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 நாடுகள் ஒருங்கிணைந்து எரிபொருள் கையிருப்பை எவ்வாறு பயன்படுத்துவது, ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது மற்றும் உலகளாவிய விநியோகத்தை சீராக வைத்திருப்பது குறித்து மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சர்வதேச எரிசக்தி சந்தைக்கு முக்கியமானதாக அமையும்.





