எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த G7 நாடுகள் – 100 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கையிருப்பு வெளியீடு

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் G7 நாடுகள் தங்களது மூலோபாய எரிபொருள் கையிருப்பிலிருந்து 100 மில்லியன் பீப்பாய் வரையிலான டீசல் மற்றும் கச்சா எண்ணெயை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.

G7 நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசர காணொளி மாநாட்டில் உலகளாவிய எரிசக்தி சந்தை நிலைமை தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்படும் கையிருப்பு சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஒருங்கிணைப்பின் கீழ் அடுத்த நான்கு மாத காலப்பகுதியில் சந்தைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, குறிப்பாக டீசல் விநியோகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்திலேயே முன்னெடுக்கப்படவுள்ளன. G7 நாடுகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் நாடுகள், முதல் 20 நாட்களுக்குள் கணிசமான அளவு டீசல் கையிருப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக G7 தலைவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், G7 நாடுகள் தங்களது சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு பணிகளை ஒருங்கிணைத்து, ஒரே நேரத்தில் பல சுத்திகரிப்பு நிலையங்கள் செயலிழக்கும் நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளன. சாத்தியமான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனை தற்காலிகமாக அதிகரிக்கவும், குறிப்பாக டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் உலகளாவிய உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தை மேலும் பாதிக்கும் வகையில் நாடுகளுக்கு இடையில் எரிசக்தி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்க்கவும் G7 நாடுகள் உறுதியளித்துள்ளன.

இந்த நடவடிக்கைகள் உலக சந்தையில் எரிபொருள் கிடைப்பை அதிகரித்து, விலை அழுத்தத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், கையிருப்பிலிருந்து எவ்வளவு அளவு டீசல் மற்றும் கச்சா எண்ணெய் எந்தெந்த நாடுகளால் வெளியிடப்படும் என்பது தொடர்பான செயல்முறைகள் IEA ஒருங்கிணைப்பின் கீழ் தீர்மானிக்கப்படவுள்ளன.

🇬🇧 பிரித்தானியாவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

இந்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், பிரித்தானியாவில் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

RAC அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, பிரித்தானியாவில் ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை 200.01 பென்ஸ், அதாவது சுமார் £2 ஆக உயர்ந்துள்ளது. இது பிரித்தானியாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு £2-ஐ கடந்த முதல் சந்தர்ப்பமாகும்.

முந்தைய சாதனை விலை 2022 ஜூன் மாதத்தில் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய விலை அதையும் கடந்துள்ளது. சராசரி குடும்ப வாகனத்தில் 55 லிட்டர் டீசல் நிரப்புவதற்கான செலவு தற்போது சுமார் £110 ஆக உயர்ந்துள்ளதாக RAC தெரிவித்துள்ளது. பிப்ரவரி இறுதியுடன் ஒப்பிடுகையில் இது சுமார் £31.70 அதிகமாகும்.

டீசல் விலை உயர்வின் தாக்கம் சாதாரண வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், போக்குவரத்து நிறுவனங்கள், விநியோக சேவைகள், கட்டுமானத் துறை, விவசாயம் மற்றும் அதிகளவு வாகனங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிரித்தானியாவில் பல வணிக வாகன ஓட்டிகள் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால் தங்களது சேவை கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக BBC-யிடம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சரக்கு போக்குவரத்துத் துறையில் டீசல் செலவு அதிகரிப்பது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

🇬🇧 டீசல் தட்டுப்பாடு இல்லை என பிரித்தானியா தெரிவிப்பு

எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், பிரித்தானியாவில் தற்போது டீசல் விநியோகத்தில் உடனடி தட்டுப்பாடு இல்லை என அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் Keir Mather தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் டீசல் விநியோகம் பல்வேறு நாடுகளிலிருந்து கிடைப்பதால் அது “வலுவானதும் நெகிழ்வானதுமாக” இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரித்தானியா தனது டீசல் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை இறக்குமதி செய்வதால், உலக சந்தையில் ஏற்படும் விநியோக மாற்றங்கள் அந்நாட்டின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

⛽ உலக எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான போக்குவரத்து சிக்கல்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சந்தையில் அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக கச்சா எண்ணெய் மற்றும் குறிப்பாக டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பிரித்தானியாவைப் போன்ற டீசல் இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள நாடுகளில் இந்த தாக்கம் வேகமாக வெளிப்பட்டுள்ளது.

இதற்கிடையில், G7 நாடுகளின் 100 மில்லியன் பீப்பாய் கையிருப்பு வெளியீடு உலக எரிசக்தி சந்தையில் கூடுதல் விநியோகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சந்தை விலை மற்றும் விநியோக நிலைமையில் இதன் தாக்கம் அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

G7 தலைவர்கள், தற்போதைய நடவடிக்கைகளின் தாக்கத்தை IEA தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையான பட்சத்தில் மேலதிக டீசல் கையிருப்புகளை வெளியிடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore