துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானத்தில் இடம்பெற்ற பரபரப்பான சம்பவம் தொடர்பான விசாரணையில், விமானத்தின் துணை விமானி தனியாகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என இஸ்ரேலிய விசாரணைத் தரப்பினர் தெரிவித்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
FZ1073 என்ற இந்த விமானத்தில், துணை விமானியாக பணியாற்றிய ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) என்பவர், விமானத்தின் கேப்டனை தாக்கி விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரத்தை இழந்ததுடன், விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க கேப்டனும் பயணிகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் மிகப்பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தனியாக செயல்பட்டாரா?
சம்பவத்தின் பின்னணி, நோக்கம் மற்றும் வேறு நபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்து UAE, இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் தனியாகவே செயல்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் CNN-க்கு தெரிவித்துள்ளார்.
மற்றொரு இஸ்ரேலிய அதிகாரியும், தற்போதைய நிலையில் சந்தேகநபருக்கு ஏதேனும் தீவிரவாத அமைப்பு அல்லது அரசாங்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான தகவல் தங்களிடம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது விசாரணையின் ஆரம்பகட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UAE அதிகாரிகளின் தகவல்
UAE சட்டமா அதிபர் ஹமத் சைஃப் அல்-ஷம்சி, துணை விமானி விமானத்தின் cockpit-இல் பயன்படுத்தப்படும் அவசரகால crash axe மூலம் கேப்டனை தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை திட்டமிட்டதாகவும், விசாரணையில் கிடைக்கும் உடல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் UAE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை UAE அதிகாரிகள் பயங்கரவாதச் செயலுக்கான முயற்சி என வகைப்படுத்தியுள்ளனர்.
விமானம் எப்படி காப்பாற்றப்பட்டது?
கேப்டன் காயமடைந்த நிலையிலும் cockpit கதவைத் திறக்க முடிந்ததாகவும், இதன் பின்னர் பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் cockpit-க்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் துணை விமானியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் மாற்று விமானிகள் விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்று, விமானத்தை பாதுகாப்பாக சவூதி அரேபியாவின் தபூக்கில் தரையிறக்கியுள்ளனர். சம்பவத்தின் போது விமானம் சுமார் 16,000 அடி உயரத்தை மிகக் குறுகிய நேரத்தில் இழந்ததாக Reuters வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரின் பின்னணி தொடர்பிலும் விசாரணை
ஹமாம் அல்-ஹம்மாமி முன்னதாக Oman Air நிறுவனத்துடன் பணியாற்றியிருந்ததாகவும், அவரது தீவிரவாதக் கருத்துகள் தொடர்பாக முன்னர் கவலைகள் எழுந்திருந்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் அவர் Royal Air Maroc நிறுவனத்துடன் தொடர்புடையிருந்ததாகவும், அதன் பின்னர் Flydubai நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது சமூக ஊடக கணக்குகள் மற்றும் முன்னைய பணிப் பின்னணி குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, சம்பவத்திற்குப் பின்னர் அவரது பெயரில் இருந்த LinkedIn கணக்கில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்ததாக CNN தெரிவித்துள்ளது. ஆனால் அந்தப் பதிவை யார் செய்தது அல்லது அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பதிவா என்பது தெளிவாகவில்லை.
இஸ்ரேல் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்வி
சந்தேகநபர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் இந்தச் சம்பவத்தில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், அவர் டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தில் துணை விமானியாக பணியாற்ற எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
விமானம் புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பெயர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விமானக் குழுவினரின் பெயர்களை பரிசோதிப்பது தங்களது தற்போதைய நடைமுறைகளில் உள்ளடங்கவில்லை என இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக CNN குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, சம்பவத்தின் நோக்கம், சந்தேகநபரின் பின்னணி, அவருக்கு வேறு நபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா, மேலும் அவர் எவ்வாறு இந்த விமானத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.





