நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கல்வி வரலாற்றில் தடம் பதித்த சிரேஷ்ட ஆசிரியர் எம். சஹாப்தீன் ஓய்வு

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கல்வி வரலாற்றில் தடம் பதித்த சிரேஷ்ட ஆசிரியர் எம். சஹாப்தீன் ஓய்வு

தில்சாத் பர்வீஸ்

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாட செயற்பாடுகளுக்கு சுமார் 27 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பங்களித்த சிரேஷ்ட ஆசிரியர் எம். சஹாப்தீன், 32 ஆண்டுகால ஆசிரியர் சேவையை நிறைவு செய்து இன்று (08) ஓய்வு பெறுகின்றார்.

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் 3ஆம் திகதி அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தைப் பெற்ற இவர், 1995ஆம் ஆண்டு முதல் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையுடன் இணைந்து நீண்டகால கல்விப் பணியை முன்னெடுத்தார்.

இடைக்காலத்தில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திலும் சேவையாற்றிய அவர், பின்னர் மீண்டும் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையுடன் இணைந்து தனது ஆசிரியர் சேவையைத் தொடர்ந்தார். குறிப்பாக 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியிலும் குறித்த பாடசாலையில் பணியாற்றியுள்ளார்.

சித்திரம், சமூகக் கல்வி, தமிழ், பொருளியல், ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு பாடங்களை இடைநிலை மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்த எம். சஹாப்தீன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் அவர்களின் ஒழுக்கம், ஆளுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளார்.

அத்துடன், பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர், முகாமைத்துவக் குழு உறுப்பினர், உயர்தரப் பிரிவு பகுதித் தலைவர், மாணவ வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பொறுப்பாசிரியர், கலாச்சாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.

பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றியதுடன், குறிப்பாக மாணவிகளின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதிலும் அவர் பங்களிப்பு செய்ததாக பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கல்வியுடன் எழுத்து மற்றும் ஊடகத்துறையிலும் பங்களிப்பு

கல்விப் பணிக்கு அப்பால் எழுத்தாளர், கவிஞர் மற்றும் அறிவிப்பாளர் எனப் பல்துறை ஆளுமையைக் கொண்ட எம். சஹாப்தீன், நிந்தவூர் வடக்கு அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில் இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியையும் பெற்றுள்ளார்.

1994ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்ற இவர், 1997ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வியியல் முதுகலைப் பட்டப் படிப்பு டிப்ளோமாவையும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனைத் துறையிலான டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

மேலும், லண்டன் BBC i-Learn Journalism டிப்ளோமா மற்றும் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் Journalism Certificate ஆகியவற்றையும் பூர்த்தி செய்துள்ளார்.

‘காலங்களின் வசந்தம்’ எனும் பெயரில் சேவைநலன் பாராட்டு

ஆசிரியர் எம். சஹாப்தீனின் நீண்டகால கல்விச் சேவையைப் பாராட்டும் வகையில், ‘காலங்களின் வசந்தம்’ என்ற தொனிப்பொருளில் சேவைநலன் பாராட்டு விழா கடந்த 07ஆம் திகதி நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அல்-ஹாஜ் ஏ.சி. ஹாமிது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை பாடசாலை ஆசிரியர் நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஆசிரியர் எம். சஹாப்தீனுக்கு வாழ்த்துக்கள், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, பொற்கிளியும் வழங்கப்பட்டது.

32 ஆண்டுகால ஆசிரியர் சேவையில் சுமார் 27 ஆண்டுகள் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையுடன் தொடர்புபட்டிருந்த எம். சஹாப்தீனின் கல்விப் பணிக்காலம், குறித்த பாடசாலையின் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலப்பகுதியாக அமைந்துள்ளது.

நிந்தவூர் 15ஆம் பிரிவைச் சேர்ந்த மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ரி.எம். மீராசாஹிபு மற்றும் ஏ. சாரா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வரான எம். சஹாப்தீன், ஆதம்பாவா ரிபானாவை திருமணம் செய்து கொண்டு மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை என நான்கு பிள்ளைகளின் தந்தையாக உள்ளார்.

நீண்டகால ஆசிரியர் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் எம். சஹாப்தீனின் கல்விப் பணிகள், அவர் கற்பித்த மாணவர்களின் நினைவுகளிலும் நிந்தவூர் கல்விச் சமூகத்தின் பதிவுகளிலும் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore