தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை காரணமாக (09) அன்று பிற்பகலில், அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹட்டன் – கம்பளை பிரதான சாலையில் உள்ள மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கொத்மலை
காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் (09) வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினையடுத்தே இந்த மண்சரிவு பாறாங்கற்கள் சரிந்து விழுந்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலிருந்து புதிய விரிசல்களுடன் மேலும் பல பெரிய பாறாங்கற்கள் பிரதான சாலையில் விழும் அபாயம் உள்ளதாகவும் கொத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்தும் மலையக பகுதிக்கு அடிக்கடி மழை பெய்து வருவதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் வாகனங்கள் செலுத்தும் போது மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் கொத்மலை – பூண்டுலோயா வீதி மற்றும் கொத்மலை – கம்பளை பிரதான வீதிகள் மண்சரிவு அபாயம் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் பலமுறை தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





