ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் மழைநீர் ஒழுகுவதால், தங்களால் முறையாகப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால், அன்றாட அலுவலகப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, அலுவலகத்துக்குள் மழைநீர் புகுவதால் முக்கிய ஆவணங்கள் நனைந்து சேதமடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றும் சுமார் 21 உத்தியோகத்தர்கள், 48 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட இடத்தில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேசைகள், கதிரைகள் மற்றும் அலுமாரிகள் உள்ளிட்ட அலுவலக உபகரணங்கள் காணப்படும் இந்த இடத்தில், போதிய வசதிகளின்றிப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், மாதாந்தம் சுமார் 3,048 அதிபர், ஆசிரியர்களுக்கும் 90 உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கான கணக்குப் பணிகளை இந்தப் பிரிவே முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில், பொருத்தமான பணிச்சூழல் இல்லாமை பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மழைநீர் ஒழுகல் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குவதுடன், பாதுகாப்பானதும் முறையானதுமான பணிச்சூழலை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





