கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு உட்பட்டே அரசாங்கம் செயற்படும்
மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தாலும், அரசாங்கம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை, நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில் மாற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலை நிலையியல் கட்டளைகளில் திருத்தம்
எனினும், ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலை நிலையியல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதம் அனுப்பப்பட்டதற்கு அடுத்த நாளே, மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளான அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர் தேரர்களுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கலந்துரையாடலின் விளைவாகவே சிறைச்சாலை நிலையியல் கட்டளைகள் தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கை
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக அரசாங்கம் ஏற்கெனவே நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திருத்தப்பட்ட சிறைச்சாலை நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுவதாகவும், நீதிமன்றத் தீர்ப்பை சட்டத்திற்கு அப்பாற்பட்டு மாற்றுவதற்கு எந்தவிதமான நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.





