ஸ்பெயினின் இரண்டாம் நிலைக் கால்பந்து தொடரில் இடம்பெற்ற போட்டியின்போது கோல்கீப்பருடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் தலையிலும் மார்புப் பகுதியிலும் காயமடைந்த டெனெரிஃப் (Tenerife) அணியின் முன்கள வீரர் ஜீசஸ் டி மிகுவல் (Jesus de Miguel), தனது 30ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 2) டெனெரிஃப் மற்றும் எஃப்.சி. அன்டோரா (FC Andorra) அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின்போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் மேலதிக நேரத்தின் ஏழாவது நிமிடத்தில் இரு அணிகளும் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, நீண்ட தூரத்திலிருந்து வந்த பந்தைத் தடுக்க அன்டோரா அணியின் கோல்கீப்பர் ஜீசஸ் ஓவோனோ (Jesus Owono) மைதானத்தின் மையப்பகுதியை நோக்கி ஓடிச் சென்றுள்ளார்.

இதன்போது அவரது முழங்கால், டி மிகுவலின் உடலுடன் பலமாக மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து டி மிகுவல் மைதானத்திலேயே அசைவின்றிக் கிடந்துள்ளார்.
உடனடியாக மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் சென்று அவருக்கு அவசர சிகிச்சை அளித்ததுடன், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் டெனெரிஃப் அணியின் சொந்த மைதானமான எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரொட்ரிக்ஸ் லோபஸ் விளையாட்டரங்கிலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது இரு அணிகளின் வீரர்களும் பெரும் அதிர்ச்சியடைந்ததுடன், டி மிகுவலின் அணித்தோழர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மோதலை ஏற்படுத்திய கோல்கீப்பர் ஜீசஸ் ஓவோனோவுக்கு நடுவர் நேரடி சிவப்பு அட்டை வழங்கியதுடன், போட்டியையும் இடைநிறுத்தியுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திங்கட்கிழமை டி மிகுவலின் உடல்நிலை மிகவும் ஆபத்தானதாக இருந்தபோதிலும், நிலைமை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. எனினும், செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

ஸ்பெயின் ஊடகங்களின் தகவலின்படி, ஆம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவசர மருத்துவப் பணியாளர்கள் உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் இதயத் துடிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணியளவில் (உள்ளூர் நேரம் காலை 08.00) அவர் உயிரிழந்துள்ளார்.
டெனெரிஃப் கழகம் இரங்கல்
ஜீசஸ் டி மிகுவலின் மரணத்தை டெனெரிஃப் கால்பந்து கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதயம் நொறுங்கிய நிலையில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்துடன் ஜீசஸ் டி மிகுவல் அலமேடாவின் மரணத்தை அறிவிக்கிறோம். இந்தப் பேரிழப்பால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெனெரிஃப் அணியினருடன் நாங்கள் துணை நிற்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், துயரமான இந்தக் காலகட்டத்தில் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து நடக்குமாறும் கழகம் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
கால்பந்து உலகிலிருந்து இரங்கல் செய்திகள்
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து கால்பந்து உலகின் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெனெரிஃப் அணியின் எதிரணியான எஃப்.சி. அன்டோரா கழகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜீசஸ் டி மிகுவலின் குடும்பத்தினர், அணித்தோழர்கள், நண்பர்கள் மற்றும் டெனெரிஃப் கழகத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
அன்டோரா கழகத்தின் இணை உரிமையாளரும் முன்னாள் பார்சிலோனா வீரருமான ஜெரார்ட் பிகே, “எனது ஆழ்ந்த இரங்கல்கள். அமைதியாக இளைப்பாறுங்கள் ஜீசஸ்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது முன்னாள் கழகமான காஸ்டெல்லோனும் (Castellon) இரங்கல் வெளியிட்டுள்ளது. லா லிகா கால்பந்து தொடரின் தலைவர் ஜாவியர் டெபாஸ், இது ஈடுசெய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டு குடும்பத்தினர் மற்றும் அணியினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பேவும் சமூக ஊடகத்தில், “மிகுந்த துயரம். இதற்கு வார்த்தைகளே இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ரியல் மாட்ரிட் அணியின் முதல் தர வீரர்கள் செவ்வாய்க்கிழமை காலை பயிற்சிக்கு முன்னர் ஜீசஸ் டி மிகுவலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எட்டு கழகங்களுக்காக விளையாடிய வீரர்
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் பிறந்த ஜீசஸ் டி மிகுவல், 2015ஆம் ஆண்டு லெகானஸ் (Leganes) கழகத்தின் ஊடாகத் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து லுகோ, ஃபுவென்லப்ரடா, இன்டர்நேஷனல் மாட்ரிட், யூனியன் அடார்வே, நவால்கார்னெரோ மற்றும் யூனியனிஸ்டாஸ் உள்ளிட்ட பல்வேறு கழகங்களுக்காக விளையாடியுள்ளார்.
2023ஆம் ஆண்டு காஸ்டெல்லோன் அணியில் இணைந்த அவர், அந்த அணி ஸ்பெயினின் இரண்டாம் நிலைக் கால்பந்து தொடருக்கு முன்னேறுவதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார். அந்த அணிக்காக 16 கோல்களையும் அடித்திருந்தார்.
பின்னர் 2025ஆம் ஆண்டு மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெனெரிஃப் அணியில் இணைந்தார். அந்த அணிக்காக 29 போட்டிகளில் விளையாடி 11 கோல்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
தனது சிறப்பான கோல் அடிக்கும் திறமையால் அணிக்கு பங்களிப்பு வழங்கி வந்த அவர், இளம் வயதிலேயே இவ்வாறு உயிரிழந்தமை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜீசஸ் டி மிகுவலுக்கு 2025ஆம் ஆண்டு பிறந்த கார்லா டி மிகுவல் பெர்னாண்டஸ் என்ற பெண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு கால்பந்து போட்டியின்போது இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மைதானத்தில் அவசர மருத்துவ உதவிகளின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.





