அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (18) புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்முனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இளைஞரைச் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அவரது உடைமையிலிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





