பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் வெளி உலகத் தொடர்பின்றித் தனிமையில் வாழ்ந்து வந்த அவா பழங்குடியினர், காடழிப்பு, சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களின் காரணமாக மற்றொரு பழங்குடி சமூகத்துடன் தொடர்புக்கு வந்துள்ளனர். பல தசாப்தங்களாகத் தங்கள் வாழ்விடத்தைப் பாதுகாத்து வந்த இந்தச் சமூகத்தினர், உயிர்வாழ்வதற்காகத் தங்களின் தனிமையான வாழ்க்கை முறையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் வடகிழக்கு அமேசான் பகுதியில் வாழ்ந்த அமகாரியா, ஜகரேவிஜ் மற்றும் இராஹோவா ஆகிய மூவரும், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், பழங்கள் மற்றும் தேன் சேகரித்தல் போன்றவற்றின் மூலம் தங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
அமகாரியாவும் ஜகரேவிஜும் சகோதரிகள். இராஹோவா, ஜகரேவிஜின் மகன் ஆவார். இவர்கள் மூவரும் பல ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், அவர்களின் வாழ்விடங்களுக்குள் மரம் வெட்டுபவர்கள், புதிய குடியேறிகள் மற்றும் கால்நடைப் பண்ணை உரிமையாளர்களின் ஊடுருவல் அதிகரித்தது. மரம் அறுக்கும் இயந்திரங்களின் சத்தம் மற்றும் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் அவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தின. இதனால், அவர்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கிரேட் கராஜாஸ் திட்டம் ஏற்படுத்திய பாதிப்பு
அவா பழங்குடியினர் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது ‘கிரேட் கராஜாஸ்’ (Great Carajás) திட்டமாகும்.
1980களில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி இரும்புத் தாதுச் சுரங்கங்களில் ஒன்றை உருவாக்குதல், ரயில் பாதைகளை அமைத்தல் மற்றும் அமேசான் காடுகளைக் கடந்து செல்லும் சாலை வலையமைப்புகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கட்டுமான மற்றும் சுரங்க நடவடிக்கைகள் அவா பழங்குடியினரின் பாரம்பரிய நிலப்பரப்பை நேரடியாகப் பாதித்தன. காடுகள் அழிக்கப்பட்டதுடன், அவர்களின் உணவு மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான இயற்கை வளங்களும் குறையத் தொடங்கின.
சர்வைவல் பிரேசில் என்ற பழங்குடியினரின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் இயக்குநர் சாரா ஷென்கர் தெரிவிப்பதன்படி, அமகாரியா, ஜகரேவிஜ் மற்றும் இராஹோவா ஆகியோர் சுவாச நோய்கள், காய்ச்சல் மற்றும் காசநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மூன்று பேர் மட்டுமே தனிமையில் வாழ்ந்ததால், அவர்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதும் நோய்வாய்ப்பட்டபோது ஒருவருக்கொருவர் உதவுவதும் கடினமாகியிருந்தது.
‘மரம் வெட்டுபவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்’
இந்த மூவரும் எதிர்கொண்ட ஆபத்துகள் குறித்து இராஹோவா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
‘நாங்கள் மிகவும் பயந்திருந்தோம். எங்களால் எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களைக் கண்டுபிடித்த மற்றொரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மரம் வெட்டுபவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்திருந்ததாகவும், மரங்களை வெட்டுவதற்கும் எடுத்துச் செல்வதற்கும் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் மரம் வெட்டுவதற்காகப் பல மரங்களில் அடையாளமிடப்பட்டிருந்தன. இதனால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கருதிய அந்தச் சமூகத்தினர், ‘எங்களுடன் வந்துவிடுங்கள். இல்லையென்றால் மரம் வெட்டுபவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்’ என்று எச்சரித்து அவர்களைத் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
20 அவா பழங்குடியினர் மற்றொரு சமூகத்துடன் தொடர்பு
அந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 16ஆம் திகதி பிரேசிலின் மரான்யாவ் பகுதியில் உள்ள அராரிபோயா பழங்குடியினர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பிரேசிலின் தேசிய பழங்குடியினர் அறக்கட்டளையான ஃபுனாய் (FUNAI) அமைப்பின் பாதுகாப்பு முகாமுக்கு 20 அவா பழங்குடியினர் வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அவர்கள், தவாரி கிராமத்தைச் சேர்ந்த குவாஜஜாரா (Guajajara) பழங்குடியினருடன் தொடர்புக்கு வந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு உணவாக மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகையொன்று வழங்கப்பட்டதாக சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கவலையளிப்பதாக சாரா ஷென்கர் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாகத் தங்கள் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் படுகொலைகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களே இன்றைய தனிமையில் வாழும் அவா பழங்குடியினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காடுகள் அழிவதால் உணவு மற்றும் வாழ்வாதாரம் பாதிப்பு
அவா பழங்குடியினரின் வாழ்க்கை அமேசான் காடுகளுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவத் தேவைகள் மற்றும் ஆன்மிக வாழ்க்கை என அவர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் காடுகளே அடிப்படையாக உள்ளன.
அவர்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிப்பதற்குப் பதிலாக, வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் மூலம் வாழும் நாடோடிச் சமூகத்தினராக உள்ளனர்.
ஆனால், காடுகள் அழிக்கப்படுவதால் வறண்ட பகுதிகள் உருவாகி, காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால், அவர்கள் வேட்டையாடுவதற்குச் சார்ந்திருக்கும் விலங்குகள் உயிரிழக்கின்றன அல்லது வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன.
2002ஆம் ஆண்டு சர்வைவல் அமைப்பிடம் கருத்துத் தெரிவித்த டூ’ஓ (To’o) என்ற அவா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், முன்பு தங்கள் பகுதியில் குரங்குகளும் மான்களும் அதிகளவில் காணப்பட்டதாகவும், தற்போது காடுகள் அழிக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தங்களுடைய நிலப்பரப்பு இல்லாமல் போனால் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும் என்றும், தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நோய்த்தொற்றுகள் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள்
தனிமையில் வாழும் அவா பழங்குடியினருக்கு மற்றொரு முக்கியமான ஆபத்து நோய்த்தொற்றுகளாகும்.
வெளி உலக மக்களுடன் தொடர்பு இல்லாமல் நீண்டகாலமாக வாழ்ந்து வந்ததால், அவர்கள் இதுவரை எதிர்கொள்ளாத பல தொற்றுநோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், மரம் வெட்டும் குழுவினர் ஆயுதங்களைக் கொண்டிருப்பதால், பழங்குடியின மக்களுக்கு வன்முறைத் தாக்குதல்கள் ஏற்படக்கூடிய அபாயமும் காணப்படுவதாக சாரா ஷென்கர் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் அவா பழங்குடியினரை மட்டுமல்லாமல், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குவாஜஜாரா சமூகத்தினரையும் பாதிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சட்டவிரோதமாகக் காடுகளுக்குள் நுழைவோரைக் கட்டுப்படுத்தவும், பழங்குடியினரின் நில உரிமைகளைப் பாதுகாக்கவும் வலுவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் காட்டுக்குத் திரும்பியவர்கள்
அமகாரியா மற்றும் ஜகரேவிஜ் ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மரான்யாவ் மாநிலத்தின் தலைநகரான சாவ் லூயிஸுக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
உடல்நலம் தேறிய பின்னர் இருவரும் மீண்டும் காட்டுக்குத் திரும்ப முடிவு செய்தனர். ஆனால், இராஹோவா மட்டும் தங்களுக்கு அடைக்கலம் அளித்த பழங்குடி சமூகத்துடனேயே தங்கிவிட்டார்.
காட்டுக்குத் திரும்பிய அமகாரியாவும் ஜகரேவிஜும் தங்களைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் தங்களது காலடித் தடங்களை மறைத்துவிட்டுச் சென்றதாக சாரா ஷென்கர் தெரிவித்துள்ளார்.
பின்னர், பல மாதங்கள் காட்டில் வாழ்ந்த நிலையில் ஜகரேவிஜ் உயிரிழந்தார். இதனால் அமகாரியா தனிமையில் விடப்பட்டார். அதன் பின்னர் அவர் மீண்டும் அந்தப் பழங்குடி சமூகத்திடம் திரும்பினார். தொடர்ந்து தனிமையில் காட்டில் வாழ்வதற்காக அவர் மீண்டும் செல்லவில்லை.
பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்
தனிமையில் வாழும் அவா பழங்குடியினரின் உயிர், உடல்நலம் மற்றும் சுயநிர்ணய உரிமைகளைப் பாதுகாப்பதே தங்களின் முன்னுரிமை என பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பாரம்பரிய நிலப்பரப்பைப் பாதுகாத்தல், சுகாதார அபாயங்களைத் தடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கும் உரிமைக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமேசான் காடுகள் வெறும் இயற்கை வளங்களைக் கொண்ட பிரதேசம் மட்டுமல்ல. பல தலைமுறைகளாகப் பழங்குடியின சமூகங்களின் வாழ்வாதாரம், கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்து வரும் முக்கியமான வாழ்விடமாகவும் திகழ்கின்றன.
எனவே, காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, பழங்குடியின மக்களின் நில உரிமைகளையும் அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையையும் பாதுகாப்பது அவசியமானதாகும்.





