பிரித்தானியாவின் மெர்சிசைட் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டுகளாக வெட்டி சுமார் மூன்று ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 65 வயதுடைய ஜோர்ஜ் கோர்டன் (George Gordon) தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நீதிமன்ற விசாரணையில் வெளியாகியுள்ளன.
62 வயதுடைய டெலியா மெக்கினெர்னி (Delia McInerney) என்ற கலைஞரின் உடல், அவருக்குச் சொந்தமான ஐந்து கினி பன்றிகளின் உடல்களுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக லிவர்பூல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இங்கிலாந்தின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனது குடியிருப்பில் வைத்து டெலியா கொலை செய்யப்பட்டதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பொலிஸாரிடம் உண்மையைத் தெரிவித்த சந்தேகநபர்
இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக, 2026 ஜனவரி 8ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட உடலில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் (Body-worn Camera) காணொளி நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில், பொலிஸார் ஜோர்ஜ் கோர்டனின் வீட்டுக்குச் சென்று டெலியா மெக்கினெர்னி எங்கிருக்கிறார் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆரம்பத்தில் அவர், டெலியா பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர் கார்ன்வால் அல்லது டென்மார்க்கில் இருக்கலாம் என்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.
எனினும், அவர் உயிருடன் இருக்கிறாரா எனப் பொலிஸார் மீண்டும் வினவியபோது, ‘இல்லை’ எனப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவர் உயிருடன் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் பொலிஸாரால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘அவர் உள்ளே இருக்கிறார்’, ‘அவர் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கிறார்’ எனத் தெரிவித்ததாக காணொளியில் பதிவாகியுள்ளது.
மேலும், அவரது உடல் இரண்டு பகுதிகளாக இருப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நிதி ஆதாயத்திற்காகக் கொலை செய்தாரா?
டெலியா மெக்கினெர்னியை ஜோர்ஜ் கோர்டன் திட்டமிட்டுக் கொலை செய்ததாகவும், பின்னர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை எடுத்துக்கொண்டதாகவும் அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர் உயிருடன் இருப்பதாக நம்ப வைப்பதற்காக டெலியாவின் தொலைபேசியைப் பயன்படுத்தி நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவை அதிகாரிகள் டெலியாவின் நலன் குறித்து சந்தேகம் எழுப்பி பொலிஸாரைத் தொடர்புகொண்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெலியாவுக்கு 22,000 பவுண்டுகளுக்கும் அதிகமான கடன் அட்டைக் கடன் இருந்ததாகவும், அவரது தொலைபேசி செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இணையத்தில் செயல்பாட்டில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து செல்லப்பிராணிகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்
குளிர்சாதனப் பெட்டியில் டெலியாவுக்குச் சொந்தமான வொக்லெட், டிம்மி, பிரெடி, லில்லி மற்றும் சாமி எனப் பெயரிடப்பட்ட ஐந்து கினி பன்றிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் இரண்டு விலங்குகளின் உடல்களைப் பரிசோதித்த கால்நடை நோயியல் நிபுணர் டாக்டர் இமானுவேல் ரிச்சி, டிம்மி மற்றும் வொக்லெட் ஆகியவை நீரில் மூழ்கடிக்கப்பட்டு, பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை மறுக்கும் சந்தேகநபர்
எனினும், ஜோர்ஜ் கோர்டன் தன் மீதான கொலைக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
62 வயதுடைய டெலியா தன்னை கத்தியால் தாக்கியதாகவும், தற்காப்புக்காகவே தான் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். விலங்குகளுக்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது உடல்நலக் குறைவு காரணமாக கோர்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.





