அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், கடந்த ஆண்டு பெரும் அழிவை ஏற்படுத்திய லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை ஆரம்பித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 30 வயதுடைய ஜொனாதன் ரிண்டர்க்னெக்ட் (Jonathan Rinderknecht) என்பவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
கடந்த 2025 ஜனவரி மாதம் ஏற்பட்ட இந்தக் காட்டுத்தீயில் 12 பேர் உயிரிழந்ததுடன், 6,800-க்கும் அதிகமான கட்டிடங்கள் தீக்கிரையாகின. குறிப்பாக, பசிபிக் பலிசேட்ஸ் (Pacific Palisades) மற்றும் மாலிபு (Malibu) பகுதிகளில் தீ வேகமாகப் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஜொனாதன் ரிண்டர்க்னெக்ட் மீது சுமத்தப்பட்ட இரண்டு மத்திய குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நடுவர் குழுவினரிடையே ஒருமித்த முடிவு எட்டப்படாததால், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் பரவிய தீ
விசாரணையில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, 2025 ஜனவரி 1ஆம் திகதி ரிண்டர்க்னெக்ட் காட்டுப் பகுதியில் தீ மூட்டியுள்ளார். அந்தத் தீ மரங்களின் வேர்ப்பகுதிகளுக்குள் மறைந்து, உடனடியாகப் பெரிய அளவில் பரவாமல் இருந்துள்ளது.
எனினும், ஆறு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தீப்பற்றியதுடன், அது கட்டுப்படுத்த முடியாத பாரிய காட்டுத்தீயாக உருவெடுத்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
முதலாவது குற்றச்சாட்டு ஆரம்பத் தீயை ஏற்படுத்தியமை தொடர்பானது. இரண்டாவது குற்றச்சாட்டு, அந்தத் தீ மீண்டும் பரவி பேரழிவை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பானதாகும்.
இந்த வழக்கில் ரிண்டர்க்னெக்ட் குற்றமற்றவர் எனத் தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கில் தீ மூட்டியதாகக் குற்றச்சாட்டு
அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தின்படி, விடுமுறைக் காலத்தில் தனிமையாக இருந்தமை, கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் ஆகியவை இந்தச் சம்பவத்திற்கான காரணங்களாக இருந்திருக்கலாம்.
மேலும், செல்வந்தர்கள் உலகை அழித்து வருவதாக அவர் ஆழமாக நம்பியிருந்ததாகவும், அதனால் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியாகக் கருதப்படும் பசிபிக் பலிசேட்ஸ் பகுதியில் திட்டமிட்டு தீ மூட்டியதாகவும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
இதனை நிரூபிப்பதற்காக அவரது ஐபோனின் இருப்பிடத் தரவுகள், பாதுகாப்புக் கமரா காட்சிகள் மற்றும் அவர் பயணித்த வாகனத்தின் இருப்பிடம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அத்துடன், அவருடன் பயணித்த சிலரின் சாட்சியங்களும் விசாரணையில் பயன்படுத்தப்பட்டன.
எனினும், போதிய நேரடி ஆதாரங்கள் மற்றும் பதிவுகள் இல்லாமல் தனது தரப்பினரை குற்றவாளியாக்க முடியாது எனப் பாதுகாப்புத் தரப்பு சட்டத்தரணி ஸ்டீவ் ஹானி வாதிட்டிருந்தார். தீர்ப்பைத் தொடர்ந்து, அதிருப்தி தெரிவித்த போதிலும் நடுவர் குழுவின் முடிவை மதிப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
பாரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 2025 ஜனவரியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பல காட்டுத்தீச் சம்பவங்களால் மொத்தமாக 31 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 16,000 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.
லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரென் பாஸ், நீதிமன்றத் தீர்ப்பு உயிரிழந்தவர்களை மீண்டும் கொண்டுவர முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்னும் தங்களது வீடுகளையும் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்பப் போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்கினாலும், காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் பலரது வாழ்க்கையில் இன்னும் தொடர்கின்றது.





