காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 30 வயதுடைய நபர் ஒருவரைக் கொலை செய்து, சடலத்தைப் புதைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் கெஸ்பேவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருதலாவ, கருவலவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி கடந்த 24ஆம் திகதி பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் இறுதியாக கெஸ்பேவைப் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வீட்டிலிருந்து சென்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் மனைவி முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பேராதனை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் கெஸ்பேவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின்போது, காணாமல் போனதாகக் கூறப்படும் நபர் கடந்த 23ஆம் திகதி காலை கெஸ்பேவைப் பகுதியில் தனது நண்பரைச் சந்தித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குறித்த நண்பர் மேலும் சிலருடன் இணைந்து பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் வைத்து அவரைக் கொலை செய்துள்ளதாகவும், பின்னர் சடலத்தை காட்டுப் பகுதியில் புதைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மடபாத்த மற்றும் பொல்கஸ்ஓவிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20, 36 மற்றும் 37 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் நேற்று (28) கெஸ்பேவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் கெஸ்பேவை நீதவான் இன்று (29) ஸ்தலப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





