ஆப்கானிஸ்தான் பாடசாலைக்கு அருகே வெடிப்புச் சம்பவம்; 10 மாணவர்கள் உயிரிழப்பு, 110 இற்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குனார் மாகாணத்தில் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 110 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவலை தலிபான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியப் பகுதியில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் பொதுமக்கள்

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த சிறுவர்களை பொதுமக்கள் பல்வேறு போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி அவசரமாக வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

வெடிப்பினால் பாடசாலைக் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதுடன், சுவர்கள் மற்றும் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

பாடசாலைக்கு அருகில் வசிக்கும் நூர் ரஹ்மான் என்பவர், வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதும் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் ஓடிச் சென்றதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அங்கு குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தனது மருமகளின் கையைக் கண்ட பின்னர் செங்கற்களை அகற்றி அவரையும் ஏனைய காயமடைந்தவர்களையும் மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெடிப்புச் சம்பவத்தின்போது அருகில் இருந்த ஹாஜி சுலைமான் என்பவர், மரத்துண்டுகளும் மனித உடல் பாகங்களும் காற்றில் சிதறியதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது சில குழந்தைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், பலர் இரத்தக் காயங்களுடன் இருந்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

சுரங்கத் தொழில் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதி

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குனார் மாகாணத்தில் பல சுரங்கத் தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே இந்தப் பேரனர்த்தத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 42 குழந்தைகள் காயமடைந்திருந்தனர். அவர்களில் 35 பேர் 10 முதல் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore