2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி விபரத்திரட்டை (Income Tax Return) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள வரி செலுத்துவோர் தமது வரி விபரத்திரட்டுகளை 2026 டிசம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.
2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது வரி விபரத்திரட்டுகளைத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.
தொழில்நுட்ப நெரிசல் காரணமாக கால அவகாசம் நீடிப்பு
இம்முறை முதன்முறையாக வருமான வரி விபரத்திரட்டுகளைச் சமர்ப்பிப்போரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் திணைக்களத்தின் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பில் (RAMIS) அதிக அழுத்தம் ஏற்பட்டு, தொழில்நுட்ப நெரிசல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பத் தாமதங்களால் வரி செலுத்துவோர் மற்றும் அவர்களுக்காக விபரத்திரட்டுகளைச் சமர்ப்பிக்கும் பிரதிநிதிகள் உரிய காலக்கெடுவுக்குள் அவற்றைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டே வருமான வரி விபரத்திரட்டை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இல்லை
இதற்கமைய, 2026 டிசம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுகளைச் சமர்ப்பிக்கும் வரி செலுத்துவோருக்கு எதிராக காலதாமதம் தொடர்பான அபராதங்கள் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறவிடப்பட்ட மதிப்பீடுகளை வெளியிடுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் குறித்த கால அவகாசத்திற்குள் விபரத்திரட்டுகளைச் சமர்ப்பிப்போருக்கு எதிராக முன்னெடுக்கப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை தமது வருமான வரி விபரத்திரட்டுகளைச் சமர்ப்பிக்காத வரி செலுத்துவோர் நீடிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தி, டிசம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.





