16 வயது சிறுமி வீட்டில் சடலமாக மீட்பு! கொலைச் சந்தேகத்தில் விமான நிலையத்தில் 48 வயது நபர் கைது!

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், 48 வயதுடைய நபர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் கிழக்கு லண்டனின் நியூஹாம் (Newham) பிரதேசத்திலுள்ள குரோஸ்வெனோர் கார்டன்ஸ் (Grosvenor Gardens), ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்த கவலையைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், லண்டன் அம்புலன்ஸ் சேவை மற்றும் வான் அம்புலன்ஸ் மருத்துவக் குழுவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும், சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 48 வயதுடைய நபர் ஒருவர் எசெக்ஸ் (Essex) பிராந்தியத்திலுள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் (Stansted Airport) வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த நபர் கடந்த நவம்பர் 16ஆம் திகதி குடும்ப வன்முறை தொடர்பான மற்றொரு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தொடர்புபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி

உள்ளூர் கவுன்சிலர் மெஹ்மூத் மிர்சா (Mehmood Mirza) தெரிவித்த தகவலின்படி, உயிரிழந்த சிறுமி பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவராவார்.

கணவன், மனைவி, 16 வயதுடைய சிறுமி மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் என அந்தக் குடும்பம் சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் வசித்து வந்துள்ளது.

சிறுமி சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், GCSE பரீட்சைக்குத் தயாராகும் மாணவியாகவும் இருந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் வீட்டிற்கு வெளியே கதறி அழுததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மகள் உயிருடன் இருக்கிறாரா என அவர் பதற்றத்துடன் கேட்டதாகவும் அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நினைவஞ்சலி நிகழ்வு

சிறுமியின் மரணத்தையடுத்து, கடந்த சனிக்கிழமை (28) இரவு சுமார் 100 பேர் ஒன்றுகூடி அவரது வீட்டிற்கு முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை வைத்து சிறுமிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நியூஹாம் பிராந்தியத்தின் துப்பறியும் பொலிஸ் அதிகாரி ஜோ லொயிட் (Jo Lloyd) கருத்துத் தெரிவிக்கையில், சிறுமியின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு விசேட உளவியல் மற்றும் ஏனைய ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் தனிப்பட்ட சம்பவமாகவே கருதப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தற்போது பரந்தளவிலான அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore