அரச மற்றும் மாகாண அரச ஊழியர்கள் நாளை நாடளாவிய சுகயீன விடுமுறைப் போராட்டம்! டிசம்பர் 14ஆம் திகதி பாரிய போராட்டம் நடத்தவும் எச்சரிக்கை!

அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் நாளை (30) சுகயீன விடுமுறைப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த ஒன்றியத்தின் பிரதிநிதி தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை பிரதேச சபையின் தவிசாளர், அனைத்து ஊழியர்களும் நாளை பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நாளைய தினம் அமைச்சுக்களில் விசேட குழுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறான அழுத்தங்கள் மற்றும் தடைகள் ஏற்பட்டாலும் நாளைய தினம் அரச மற்றும் மாகாண அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

குறிப்பாக, இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் தகுதிகாண் காலத்தில் (Probation Period) பணியாற்றும் அரச ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய ஊழியர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் என்றும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளைய தினத்திற்குள் தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் திட்டவட்டமான பதிலை வழங்கத் தவறினால், எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் காலப்பகுதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரச மற்றும் மாகாண அரச ஊழியர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாளைய தினம் அரச அலுவலகங்கள் மற்றும் பொதுச் சேவைகளின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore