வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உறுதியா?

விண்ணில் பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய மர்மங்கள் பல தசாப்தங்களாக உலகையே உலுக்கி வரும் ஒரு விவாதப் பொருளாகும். இந்நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன், யுஎப்ஓ தொடர்பான மிகவும் ரகசியமான வரலாற்று ஆவணங்களின் இரண்டாம் கட்டப் பதிப்பை கடந்த 22 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாகப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான war.gov/UFO பக்கத்தில் இந்தத் தரவுகளைப் பதிவேற்றியுள்ளது. இந்த இரண்டாம் கட்டத் தொகுப்பில் மொத்தம் 222 கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இராணுவ பைலட்டுகள் மற்றும் உளவுத்துறை ரேடார்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட, இதுவரை பொதுமக்களுக்குக் காட்டப்படாத 51 வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்வெளி வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் ஆடியோ பதிவுகளும் இதில் அடங்கும். நியூ மெக்சிகோவிலுள்ள மிக ரகசியமான சாண்டியா இராணுவ தளத்திற்கு அருகில், கடந்த 1948 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 209 விசித்திரமான சம்பவங்கள் குறித்த 116 பக்க வரலாற்று ஆவணம் இதில் இடம்பெற்றுள்ளது. அங்கு வானத்தில் பச்சை நிற ஒளிக்கோளங்கள், வட்டு வடிவப் பொருட்கள் மற்றும் நெருப்புப் பந்துகள் பறந்ததாக அந்த ஆவணங்களில் ராணுவ வீரர்கள் விவரித்துள்ளனர்.

ஒரு மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கொடுத்த வாக்குமூலத்தின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் பயணித்த ஹெலிகாப்டருக்கு அருகில் ‘ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்திலான இரு பெரும் ஒளிக்கோளங்கள்’ தோன்றி, பின்னர் அங்கிருந்த போர் விமானங்களை முக்கோண வடிவில் சூழ்ந்து கொண்டு துரத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலவுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலத்தின் வீரர்கள் விண்வெளியில் தங்களின் விண்கலத்திற்கு வெளியே விசித்திரமான ஒளிக்கீற்றுகள் மற்றும் மின்னல்களைக் கண்டதாகப் பேசும் ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. ஏரி ஹூரான் பகுதியில் பறந்த ஒரு விசித்திரமான பொருளைஅமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தும் அதிமுக்கிய வீடியோவும் இந்தத் தொகுப்பில் உள்ளது.

இதற்கு முன்பாக, இதே மே மாதம் எட்டாம் தேதி இதன் முதல் கட்ட 161 ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அந்தத் தளம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மத்தியில் இந்த ஆவணங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தாலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் ‘ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷன் அலுவலகம்’ மற்றும் விண்வெளி அறிவியல் வல்லுநர்கள் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இந்த ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் யாவும் வானத்தில் மனிதர்களால் உடனடியாகக் கண்டறிய முடியாத விசித்திரமான விண்கலங்கள் அல்லது நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன.

இந்த வீடியோக்களில் உள்ள பல பொருட்கள் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அதிநவீன உளவு ட்ரோன்களாகவோ அல்லது மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களாகவோ இருக்கலாம்.

எனவே, இவை வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்கள் தான் என்பதற்கான எந்தவொரு உறுதியான அல்லது அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் இந்த ஆவணங்கள் இன்னும் வழங்கவில்லை என்று வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore