ஊடகத்துறையினருக்கான பட்டய நிறுவனம் உருவாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்

இலங்கையில் ஊடகத்துறையினருக்கான தொழில்முறை தரநிலைகளை அறிமுகப்படுத்தி பராமரிக்கும் நோக்கில் “இலங்கை பட்டய ஊடகத் தொழில்முறை நிபுணர்கள் நிறுவனம்” (Chartered Institute of Media Professionals of Sri Lanka) உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

2026 ஜூன் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் படி, இந்த நிறுவனம் ஒரு சட்டபூர்வ நிறுவனமாக செயல்பட்டு உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி நிகழ்ச்சிகள், பரீட்சைகள் நடத்துதல் மற்றும் ஊடகத்துறையின் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்துதல் போன்ற அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

தகுதியான ஊடகத்துறையினரை பதிவு செய்தல், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி வழங்கல், ஆய்வுகளை முன்னெடுத்தல், ஒழுக்க விதிமுறைகள் மூலம் தொழில்முறை கட்டுப்பாட்டை பேணல் மற்றும் உள்ளூர், சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் ஊடகத்துறையைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக சபையினால் நிர்வகிக்கப்படும். நிரந்தர நிர்வாக சபை அமைக்கப்படும் வரை, அமைச்சரால் நியமிக்கப்படும் இடைக்கால சபை நிறுவனத்தின் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்பார்வையிடும்.

சட்டமூலத்தின் படி, ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக முகாமையாளர்கள், ஊடக கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் ஊடகத் தொழில்முறை நிபுணர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், சட்டமாக அமலுக்கு வருவதற்கு முன் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore