பல உயிரிழப்புகளுடன் முடிந்த மீகொட சந்திப்பு விபத்து தொடர்பில், கேப் வாகனத்தின் உரிமையாளர் மற்றும் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஜூன் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை வழக்கறிஞர் மூலம் மீகொட பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும், பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து அவிசாவெல்ல–கொழும்பு உயர் நிலை வீதியில் மீகொட பகுதியில் இடம்பெற்றது. வேசாக் தானசாலைக்கு வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது கேப் வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்கு பின்னர் கேப் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். அவரும் ஜூன் 16 வரை விளக்கமறியலில் உள்ளார்.
விசாரணைகளில், விபத்து நேரத்தில் வாகனத்தில் மேலும் மூவர் இருந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் இருவர் பின்னர் சரணடைந்துள்ள நிலையில், மற்றொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.





