(மின்மினி மின்ஹா + நூருல் ஹுதா உமர்)
தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தின் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் நடைமுறை விளைவுகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட நிகழ்வு ஒன்று திங்கட்கிழமை (23) சம்மாந்துறை பிரதேச சபையில் நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சுற்றாடல் விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது, தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுப்பதில் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாட்டு பங்கு, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான உள்ளூர் மட்டச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால சுற்றாடல் முகாமைத்துவத் திட்டங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை அம்பாறை மாவட்ட அலுவலக உதவி பணிப்பாளர் பி.எம்.டபிள்யூ.என். பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். இஸ்ஹாக் (நளிமி) மற்றும் மாவட்ட சுற்றாடல் உத்தியோகத்தர் கே. குறைஷியா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கவுரைகளை வழங்கினர்.
சுற்றாடல் சட்டத்திருத்தம் குறித்த புரிதலை உள்ளூராட்சி நிர்வாக மட்டத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கும் இந்நிகழ்வு பயனுள்ளதாக அமைந்ததாக பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.







