கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்பிற்காக விசேட குழு

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகள், அனுமதியற்ற காணி நிரப்பல்கள் மற்றும் கடற்கரையை ஒட்டிய அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும், நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக தென் மாகாணத்தின் முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பள்ளியகுருகே செயல்படவுள்ளதுடன், தொடர்புடைய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இதில் உள்வாங்கப்படவுள்ளனர்.

அரசியல் அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற காணி அபகரிப்புகள் மற்றும் காணி நிரப்பல்களைத் தடுப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையிலான விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மகாவலி அதிகார சபையினால் 5 வருடங்களுக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னர் வர்த்தக நோக்கங்களுக்காக வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் திட்டங்கள் எவையும் செயல்படுத்தப்படாத காணிகளை மீண்டும் அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொறுப்பேற்கப்படும் காணிகள் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக முறையான வழிமுறையின் கீழ் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore