இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துப் படையை பலப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 600 புதிய பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல்களின்படி, இந்தத் தொகுப்பில் அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காக 200 சொகுசு (Luxury) பேருந்துகளும், சாதாரண வழித்தட சேவைகளுக்காக 400 பொதுப் பேருந்துகளும் அடங்கும். இப்பேருந்துகள் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளன.
மேலும், அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மெட்ரோ பேருந்துகளில் அட்டை (Card) அடிப்படையிலான கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செப்டம்பர் 20 முதல் அவை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வழித்தடங்களில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதோடு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் SLTB பேருந்து சேவையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.





