ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்பம்: பாரிஸில் பொது இடங்களில் மது அருந்தவும் விற்கவும் தடை

ஐரோப்பாவை தாக்கியுள்ள கடும் வெப்ப அலை காரணமாக, மருத்துவமனைகளின் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதற்கும், எடுத்துச் செல்லும் வகையிலான (Takeaway) மதுபான விற்பனைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7.00 மணி வரை, மேலும் சனிக்கிழமை நண்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி வரை பொது இடங்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது.

அதேவேளை, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் சனிக்கிழமை காலை 7.00 மணி வரை, மீண்டும் சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி வரை எடுத்துச் செல்லும் வகையிலான மதுபான விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உரிமம் பெற்ற பார்கள் மற்றும் உணவகங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் பிரான்சை தொடர்ந்து தாக்கியுள்ள வெப்ப அலை தற்போது ஜெர்மனி மற்றும் செக் குடியரசு நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனியில் வெப்பநிலை 40°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் பிரதமர் செபஸ்தியன் லெகோர்னு நாட்டின் சுகாதார எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாரிஸ் நகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவித்த துணை மேயர் எம்மானுவல் கிரெகுவார், கடும் வெப்பத்திலும் வெளியில் ஓடுதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்தார்.

இதற்கிடையில், பாரிஸ் புறநகரில் காருக்குள் விடப்பட்டிருந்த 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், வடமேற்கு பிரான்சின் ரென்னஸ் பகுதியில் கடும் வெப்பம் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக பிரான்சில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், நாட்டின் மேற்குப் பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக Garorock இசை விழாவின் முதல் நாள் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore