பொசோன் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அனுராதபுரம் அட்டமஸ்தானம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ராஜமகா விகாரையை மையமாகக் கொண்டு நடைபெறும் அரச பொசோன் விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொம்பனிவீதி, கோட்டை, மருதானை, மாளிகாவத்தை மற்றும் அதுருப்புவீதி பொலிஸ் பிரிவுகளில் 3 பக்தி கீ நிகழ்ச்சிகள், 70 பொசோன் கூடுகள் மற்றும் 4 தானசாலைகள் அமைக்கப்படவுள்ளதுடன், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சாரணர் சங்கம், ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து பொலிஸ் தலைமையகம் வரையிலான பகுதியில் சாரணர் பொசோன் வலயத்தை ஏற்பாடு செய்யவுள்ளது.
விழா காலத்தில் முக்கிய வீதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, போக்குவரத்து பொலிஸார் வழங்கும் மாற்று வழித்தடங்களை பொதுமக்கள் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





