அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் தானாக குடியுரிமை வழங்கும் பிறப்புரிமை குடியுரிமை (Birthright Citizenship) நடைமுறையை ரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் எதிராக தீர்ப்பளித்துள்ளது.
6–3 பெரும்பான்மை தீர்ப்பில், டிரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்ற பின்னர், தற்காலிக விசா அல்லது ஆவணமற்ற குடியேற்ற பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்குவதைத் தடுக்க டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான பெரும்பான்மை நீதிபதிகள், 14ஆவது திருத்தச் சட்டமும், 1898ஆம் ஆண்டு வழங்கப்பட்ட United States v. Wong Kim Ark தீர்ப்பும் பிறப்புரிமை குடியுரிமையை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டனர். மேலும், நீண்டகால சட்ட விளக்கத்தை மாற்றுவதற்கு டிரம்ப் தரப்பு போதுமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, டிரம்ப், “இது நமது நாட்டிற்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டு, பிறப்புரிமை குடியுரிமையை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க சிவில் சுதந்திர சங்கம் (ACLU) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை வரவேற்று, “அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்ற அரசியலமைப்பின் அடிப்படை வாக்குறுதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளன.





