பாகிஸ்தானின் லாகூர் நகரில் அமைந்திருந்த தனியார் கல்வி நிலையம் (Tuition Centre) ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் மேலும் 8 குழந்தைகள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த குழந்தைகள் 4 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பழமையான கட்டிடத்தில் இயங்கிவந்த கல்வி நிலையத்தின் முழுமையடையாத இரண்டாவது மாடியின் கூரை தரமற்ற கட்டுமானம் காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேரத்தில் கட்டிடத்தில் பழுதுபார்ப்பு பணிகள் இடம்பெற்றதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வி நிலையத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தரமற்ற கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால், பாகிஸ்தானில் இதுபோன்ற கட்டிட இடிபாடுகள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.





