உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுக்குள் நுழையும்.
இந்த நிலையில் இந்த தொடரில் சான்பிரான்சிஸ்கோவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா – பொஸ்னியா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா அணியை வீழ்த்தியது.
அமெரிக்க அணி சார்பில் 45-வது நிமிடத்தில் போலரின் பலோகன் முதல் கோலை அடித்தார்.
பின்னர் 82-வது நிமிடத்தில் மாலிக் டில்மன் ஃப்ரீ கிக் மூலம் இரண்டாவது கோலை பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மறுபுறம், பொஸ்னியா அணி உலக கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.





