வெளிநாடுகளில் செயல்படும் இலங்கையின் 63 தூதரகங்கள் மற்றும் பிரதிநிதி அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் பொதுவான இணையத்தள தளத்தின் கீழ் இந்த இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு டிஜிட்டல் சேவைகள் மற்றும் தகவல்களை இலகுவாக அணுகுவதற்கான முக்கிய நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் மூலம், அந்தந்த தூதரகங்கள் மற்றும் பிரதிநிதி அலுவலகங்கள் வழங்கும் தூதரக சேவைகள், இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
புதிதாக இணையத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதான இலங்கை வெளிநாட்டு பிரதிநிதித்துவங்களில் புக்கரெஸ்ட், த ஹேக், கெய்ரோ, பிரேசிலியா, புதுடெல்லி, வெலிங்டன், மாலை, பாரிஸ், பிரிட்டோரியா, ஒட்டாவா, சென்னை, மும்பை, டோக்கியோ, லண்டன், ரியாத், பெர்லின், சியோல், மாஸ்கோ, அபுதாபி, தோஹா, பீஜிங், வாஷிங்டன், வியன்னா, பாங்கொக், குவைத், ரோம், மெல்பேர்ன் மற்றும் ஜெனீவா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் அடங்குகின்றன.
அத்துடன், டுபாய், டொராண்டோ, மிலான், ஷாங்காய், ஜெட்டா, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் குவாங்சோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகங்களுக்கும் இணையத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நியூயோர்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகங்களும், பலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகமும் இந்த புதிய இணையத்தள வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள் மட்டுமன்றி, இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு தரப்பினரும் தத்தமது நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்களிடமிருந்து நம்பகமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





